829. பைச்சூர் அரவப் படநடத்
தான்அயன் பற்பலநாள்
எய்ச்சூர் தவஞ்செய் யினும்கிடை
யாப்பதம் ஏய்ந்துமண்மேல்
வைச்சூரன் வன்தொண்டன் சுந்தரன்
என்னுநம் வள்ளலுக்குக்
கச்சூரில் சோறிரந் தூட்டின
ரால்எம் கடவுளரே.
உரை: நஞ்சின் பசுமை கொண்டு ஊர்ந்தேகும் பாம்பின் படத்தின் மேல் நின்று ஆடுகின்ற திருமாலும் அயனும் மிகப் பல நாட்கள் தளர்ந்து மெலிந்து தவம் புரியினும் கிடைத்தற்கரியவாகிய திருவடிகள் மண்மேற் பொருத்த வைத்து ஊரனாகிய வன்றொண்ட னெனப்படும் சுந்தரம் என்று சிறப்பித்துப் பேசப்படும் வள்ளற்பிரானுக்காகக் கச்சூரில் வீடுகளில் சோறு இரந்து கொணர்ந்து உண்பித்தவர் எம் கடவுளாகிய சிவபெருமான். எ.று.
பைத்து - எய்த்து, வைத்து என்பன முறையே எதுகையின்பம் நோக்கி, பைச்சு, எய்ச்சு, வைச்சு என வந்தன. விட முடைமையால் பாம்பின் வாய் பசுமையுடன் இருப்பது பற்றி, “பைச்சூர் அரவம்” என்று கூறுகின்றார். இப்பாம்புக்கு காளிங்கன் என்று பெயர் கூறுவர். திருமால் கண்ணனாய் அருள் விளையாடல் புரிந்தபோது காளிங்கன் என்ற பாம்பின் தலைமேல் நின்று ஆடினான் என்பர். அதனால், “பைச்சூர் அரவப்பட நடத்தான்” என்று குறிக்கின்றார். தவத்தால் மெய்நடை தளர்ந்து ஊர்ந்தேகும் அளவு மெலிவது தோன்ற, “எய்ச்சூர் தவம்” என்று உரைக்கின்றார். திருமாலும் பிரமனும் எத்துணைக் கடுமை வாய்ந்த அரிய தவம் புரியினும் சிவனுடைய திருவடியைப் பெறுவது அரிது என்பது தோன்றத் “தவம் செய்யினும் கிடையாப் பதம்” என்று இயம்புகிறார். ஏய்ந்தென்னும் வினையெச்சம் ஏய என்பதன் திரிபு. ஊரன் வன்றொண்டன் சுந்தரன் என்பன வினை வேறுபடாப் பலபொருள் ஒருசொல். தன்னைப் பரவித் திருவடி வணங்கினார்க்கு அருள் வழங்கும் பெருமானாதலால் அவரை “வள்ளல்” என்று சிறப்பிக்கின்றார். ஊட்டினர் என்பது உண்பித்தார் என்னும் பொருளதாகும். இவ்வரலாற்றை, “மெய்ப் பசியால் மிகவருந்தி இளைத் திருந்தீர் வேட்கைவிட, இப்பொழுதே சோறிரந்திங்கு யான் உமக்குக் கொணர்கின்றேன், அப்புறம் நீர் அகலாதே சிறிது பொழுதமரும் எனச் செப்பி அவர் திருக்கச்சூர் மனைதோறும் சென்றிப்பார்” என்று சொல்லி, பின்னர்த் தாம் இரந்து கொண்டுவந்த உணவை, “அரந்தையரும் பசிதீர அருந்துவீர்” என அளித்தாராக, சுந்தரர், தம்முடன் போந்த “தவத் தொண்டருடன்” உண்டருளினார் எனச் சேக்கிழார் இனிமையுற எடுத்தோதுகின்றார்.
இதனால், திருக்கச்சூரில் சுந்தரர்க்குச் சோறிரந்து கொணர்ந்து உண்பிக்குமாற்றால் வழங்கிய திருவருள் விளக்கப்பட்டமை யறிக. (6)
|