83.

    பாரும் விசும்பும் அறிய வெனைப்
        பயந்த தாயும் தந்தையும் நீ
    ஓரும் போதிங் கெனி லெளியேன்
        ஓயாத் துயருற்றிட னன்றோ
    யாருங் காண வுனை வாதுக்
        கிழுப்பே னன்றியென் செய்கேன்
    சேரும் தணிகை மலை மருந்தே
        தேனே ஞானச் செழுஞ்சுடரே.

உரை:

     திரண்டுயர்ந்து விளங்கும் தணிகை மலைமேல் எழுந்தருளும் மருந்தும் தேனும் ஞானச் செழுஞ்சுடருமாய் விளங்குபவனே, மண்ணுலக மக்களும் விண்ணுலகத் தேவரும் நன்கறிய இவ்வுலகில் என்னைப் பெற்ற தாயும் தந்தையும் நீயாவாய் என்பதை எண்ணும் போது எளியனாகிய யான் குன்றாத துயரமுற்று வருந்துதல் நன்றாகுமா? மக்கள் தேவராகிய யாவரும் கண்டு வியக்குமாறு உன்னோடு வாது புரிவதன்றி வேறே யான் என்ன செய்ய வல்லேன்? எ. று.

     சேர் - திரட்சி. கல்லும் மண்ணுமாய்த் திரண்டுயர்ந்து நிற்றலின் தணிகை மலை, “சேரும் தணிகை” எனப்படுகிறது. “தாயானே தந்தையுமாகிய தன்மைகள் ஆயானே” (காறாயில்) எனப் பெரியோர் கூறுதல் கொண்டு, “பாரும் விசும்பும் அறிய எனைப் பயந்த தாயும் தந்தையும் நீ ஓரும் போது இங்கு எனில்” என வுரைக்கின்றார். உயிரினம் அனைத்துக்கும் இறைவனே தாயும் தந்தையுமாவன் என்பது எல்லா வுலகும் அறிந்த செய்தியாதல் தோன்றப் “பாரும் விசும்பும் அறிய” என்றும், இயற்கை யறிவும் நூலறிவும் கொண்டு ஆராய்ந்த வழி அஃது உண்மையாதல் தெரிந்தமை புலப்பட, “இங்கு ஓரும் போது” என்றும் இயம்புகிறார். துன்பமே யில்லாத பெற்றோருக்குப் பிறந்தவன் துன்புறுதல் முறை யன்றென்றற்கு “எளியேன் ஓயாத் துயருற்றிடல் நன்றோ” என்று கூறுகிறார். யான் உறுதுயரம் நீதாயும் தந்தையுமாம் எனும் உரைக்கு மாறாதலின், வாதம் புரிந்து உண்மை தெளிய வேண்டியிருத்தலால், “யாரும் காண உனை வாதுக் கிழுப்பேன்” எனவும், அது தவிர யான் செய்ய வல்லது பிறிதில்லை என்பார், “என் செய்கேன்” எனவும் எடுத்துரைக்கின்றார்.

     இதனால், எனைப் பயந்த தாயும் தந்தையும் நீயாகவும், யான் ஓயாத் துன்பமுற்று வருந்துமாறு அறிவு நெறிக்குப் பொருத்தமாகாது என விளம்பியவாறாம்.

     (2)