830.

     ஏணப் பரிசெஞ் சடைமுத
          லானஎல் லாம்மறைத்துச்
     சேணப் பரிகள் நடத்திடு
          கின்றநல் சேவகன்போல்
     மாணப் பரிபவம் நீக்கிய
          மாணிக்க வாசகர்க்காய்க்
     காணப் பரிமிசை வந்தன
          ரால்எம் கடவுளரே.

உரை:

     வலிய செலவையுடைய வேதக் குதிரை, சிவந்த சடை ஆகிய எல்லாவற்றையும் மறைத்துச் சேணங்கள் இட்ட குதிரைகளைச் செலுத்துகின்ற நல்ல சேவகன் போல் தோன்றி, மிக்குத் தோன்றிய துன்பத்தைப் போக்கும் பொருட்டு மாணிக்க வாசகர்க்காக மண்ணக மக்கள் காணக் குதிரைமேல் வந்தருளினார் எம் கடவுளாகிய சிவபெருமானார். எ.று.

     ஏண் - வலிமை; ஞானத்தால் வன்மை மிக்க வேதங்களைக் குதிரையாகவுடைய னென்பது பற்றிச் சிவனை “ஏணப் பரி மறைத்து” எனச் சிறப்பித்து உரைக்கின்றார். மின்னின் ஒளியையுடைய செஞ்சடையை வாளாது “செஞ்சடை” எனக் குறிக்கின்றார். பிறையும் கங்கையும் இடப்பால் மங்கையும் மானும் மழுவும் மறைத்துக்கொண்டு வந்தமை பற்றி, “எல்லாம் மறைத்து” என்று பரிந்துரைக்கின்றார். சேணமிட்ட விரைந்த செலவையுடைய குதிரைகளைச் செலுத்தும் சேவகன் என்றற்குச் “சேணப் பரிகள் நடத்திடுகின்ற சேவகன்” என்று கூறுகின்றார். சேவகன் போல் தோன்றி என்றதனால், இயல்பிலே அப்பெருமான் குதிரைச் சேவகன் அன்று, அடியார்கட் கருளல் வேண்டி இவ்வேடம் பூண்டுள்ளான் என்பது கருத்து. “மதுரைப் பெருநன் மாநகர் இருந்து குதிரைச் சேவகனாகிய கொள்கையும்” (2 : 45) என மணிவாசகர் உரைப்பது காண்க. பரிபவம் - துன்பம். நீக்கிய, செய்யிய வென்னும் வினையெச்சம். பரிபவம் மாண நீக்கிய என இயையும். காண்டற்குரிய எழுவாய் வருவிக்கப்பட்டது.

     இதனால், மாணிக்கவாசகர்க்குண்டாய வருத்தம் போக்கக் குதிரைச் சேவகனாய் வந்தருளிய செயல் விளக்கப்படுகிறது.

     (7)