831.

     எல்லாம் செயவல்ல சித்தரின்
          மேவி எழில்மதுரை
     வல்லாரின் வல்லவர் என்றறி
          யாமுடி மன்னன்முன்னே
     பல்லா யிரஅண்ட மும்பயம்
          எய்தப் பராக்கிரமத்துக்
     கல்லானை தின்னக் கரும்பளித்
          தார்எம் கடவுளரே.

உரை:

     எச் செயலையும் புரியவல்ல சித்தரைப் போல உருக்கொண்டு, அழகிய மதுரைக்கண், உள்ள வல்லார்க்கெல்லாம் வல்லாராகிய சொக்கநாதன் வந்துள்ளார் என்று அறியாத முடி வேந்தனான பாண்டியன் முன், பல ஆயிரக் கணக்காகவுள்ள அண்டங்களில் வாழ்பவரெல்லாம் அஞ்சும்படியாக, வீரச் செயல் பல புரிந்து கல்லாலாகிய யானையும் தின்னும் படியாகக் கரும்பளித் தருளினவர் எம்முடைய கடவுளாகிய சிவபெருமான். எ.று.

     எல்லாம் செயவல்ல சித்தர் - எத்தகைய செயலையும் நினைத்தபடி செய்ய வல்லவர். இதனைப் பரஞ்சோதியார் திருவிளையாடல் எல்லாம் வல்ல சித்தரான படலத்துட் காண்க. சிவபெருமான் எல்லாம் வல்ல சித்தராகி வந்து, “நாகநாடு பொன் னாட்டுள பொருளும் அந்நகருள் ஆக ஆக்கியும் இன்னணம் இச்சைகள் அனந்தமாக நாயகன் மலைமகள் நாயகன் மதுரை, ஏக நாயகன் திருவிளையாடல் செய்திருந்தான்” (எ. ல். வல். சித். 20) என்பது காண்க. மதுரை வல்லாரின் வல்லவர் என்றது, மதுரையில் கோயில் கொண்டருளும் சொக்கநாதப்பெருமானை, பல்வகை ஞானமும் பல்வகைச் செயலும் வல்லுநரை வல்லார் என்பார்; சிவபெருமான் வல்லவரெனப் படுவார் எல்லார்க்கும் தலையாயவர் என்றற்கு “வல்லாரின் வல்லவர்” என்று கூறுகின்றார். முடிமன்னனும் மக்களினத்தனவனாதலின், மதுரைக்குரிய சொக்கநாதப் பெருமானைக் காண்பதிலனாதலால், “அறியா முடிமன்னன்” என்று அறிவிக்கின்றார். பல்லாயிர அண்டம் என்றவிடத்து அடை பன்மை குறித்தது. பயன் - அச்சகம், பராக்கிரமித்தல் - பேராண்மை தோன்றச் செய்தல். கல்லானை - கல்லால் செய்யப்பட்டதோர் செய்கை யானை யுருவம்.

     இதனால், கல்லாலாகிய யானை கரும்பு தின்னச் செய்த அற்புதத்தை விளக்கிச் சிவனது பரமாந்தன்மை உரைத்தவாறு.

     (8)