832. மால்எடுத் தோங்கிய மால்அயன்
ஆதிய வானவரும்
ஆல்அடுத் தோங்கிய அந்தண
னேஎன் றடைந்திரண்டு
பால்எடுத் தே்ததநம் பார்ப்பதி
காணப் பகர்செய்மன்றில்
கால்எடுத் தாடும் கருத்தர்கண்
டீர்எம் கடவுளரே.
உரை: மயக்கத்தினீங்கியுயர்ந்த திருமால் பிரமன் முதலாய தேவர்களும் ஆலின் கீழ் இருந்து அறம் எடுத்தோதி யுயர்ந்த அந்தணனே என்று நினைந்து போந்து இரு பக்கத்திலும் இருந்து புகழ்பாட, நாம் வணங்கும் பார்வதியம்மையார் நின்று காணச் சான்றோர் புகழும் சபையின்கண் ஒரு காலை எடுத்தாடும் தலைவரே எம்முடைய கடவுளாவார், காண்மின். எ.று.
தாம் தாமே பிரான் என மயங்கித் தலை தடுமாறிய செய்தி பற்றி, “மால் எடுத்தோங்கிய மால்” என மொழிகின்றார். “பிரமனும் மாலும் பிரானே நான் எண்ணப், பிரமன்மால் தங்கள் பேதமையாலே, பரமன் அனலாய்ப் பரந்து முன் நிற்க, அரனடி தேடியரற்றுகின்றாரே” (திருமந். 372) என வருவது காண்க. “அறங்கிளரும் நால்வேதம் ஆலின் கீழ் இருந்தருளி” (ஞான. 1411) எனச் சான்றோர் உரைப்பதனால் “ஆல் அடுத்தோங்கிய அந்தணனே என்று அடைந்திரண்டு பால் அடுத்தேத்த” என்று பாடுகின்றார். தில்லைப் பொன்னம்பலத்தில் உமையாள் காணத் திருக் கூத்தாடும் சிறப்பைக் காட்டற்குப் “பார்ப்பதி காணப் பகர்செய் மன்றில் கால் எடுத்தாடும் கருத்தர்” என உரைக்கின்றார். அவர் திருக்கூத்தை உமையாள் காண ஆடுகின்றார் என்பதைக் “கண்டங் கரியான் கருணை திருவுருக், கொண்டங் குமை காணக்கூத்து கந்தானே” (திருமந். 2732) என்று சான்றோர் கூறுதல் காண்க. ஞானத்தான் மிக்க பெரியோர் புகழ்ந்து பரவும் பெருமையுடையதாகலின், பொற்சபை, “பகர்செய் மன்று” எனப் பாராட்டப்படுகிறது.
இதனால், ஆலின் கீழ் இருந்து அறமுறைத்தவனும், அம்பலத்தின் கண் அம்பிகை காண ஆடல் புரிபவனும் ஆகிய பரமனே எமது கடவுளாவார், என்பதாம். (9)
|