833.

     மாற்பதம் சென்றபின் இந்திரர்
          நான்முகர் வாமனர்மான்
     மேற்பதம் கொண்ட உருத்திரர்
          விண்ணவர் மேல்மற்றுள்ளோர்
     ஆற்பதம் கொண்டபல் ஆயிரம்
          கோடிஅண் டங்கள்எல்லாம்
     காற்பதம் ஒன்றில் ஒடுக்கிநிற்
          பார்எம் கடவுளரே.

உரை:

     திருமால் உறையும் பதமும், அப்பால் இந்திரர், பிரமர், வாமர் முதலியோர் உறையும் பதங்களும் மூலப்பகுதியாகிய மானுக்கு மேற்பட்ட பதங்களில் உறையும் உருத்திரர், தேவர் முதலியோர் பதமும், அவர்கட்கு மேலும் மற்றுமுள்ளோரால் பதமெனக் கொள்ளப்பட்ட பல்லாயிரம் கோடி அண்டங்கள் அனைத்தும் தனது திருவடியிரண்டில் ஒன்றில் ஒடுக்கி நிற்பவராவர் எமது கடவுளாகிய சிவபெருமான். எ.று.

     மாற்பதம்- திருமால் உறையும் பதம். திருமாற் பதத்துக்கு அப்பால் இந்திரர்களும் பிரமர்களும் வாம தேவர்களும் தனித்தனியுறையும் பதங்கள் கூறப்படுதலின் இந்திரர் முதலியோர் எண்ணிறந்தவர் உளரென்பது பற்றிப் பன்மையிற் கூறியுள்ளார். வாம மார்க்கத்தார் விரும்பிப் பரவும் தேவர்கள் வாமனர் எனப்படுகின்றனர். மூலப்பகுதி, மான் எனப்படுகிறது. சுத்தமாயை விந்து எனவும், அசுத்தமாயை மோகினி எனவும், மூலப்பகுதி மான் எனவும் கூறப்படுகிறது. ஒவ்வொரு தத்துவத்துக்கும் புவனங்கள் பல உண்மையின், ஆங்காங்குறையும் புவனபதிகளை இந்திரர் நான்முகர் முதலாக மொழிகின்றார். சிவகாமத்து அத்துவப் பிரகரணங்களில் இவை விரியக் கூறப்படுவதைப் பவுட்கர சங்கிதை, சிவதருமோத்தரம் ஆகியவற்றில் காணலாம். எல்லாம் வல்ல சிவபெருமான் விசுவரூபனாய் நிற்கையில் இவ்வண்டங்கள் யாவும் அவன் காலடியில் ஒடுங்குவது காட்டற்குத்தான் “காற்பதம் ஒன்றில் ஒடுக்கி நிற்பார் எம் கடவுளரே” என எடுத்துரைக்கின்றார்.

     இதனால், சிவபரம் பொருள் விசுவமாய் விசுவாதிகனாய் விளங்கும் திறம் எடுத்துரைத்தவாறு.

     (10)