835. கருமால் அகற்றும் இறப்பதனைக்
களையு நெறியும் காட்டுவிக்கும்
பெருமால் அதனால் மயக்குகின்ற
பேதை மடவார் நசைஅறுக்கும்
அருமால் உழந்த நெஞ்சேநீ
அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
திருமால் அயனும் தொழுதேத்தும்
சிவாய நமஎன் றிடுநீறே.
உரை: நீக்குதற்கரிய மயக்கத்தில் கிடந்து வருந்திய நெஞ்சமே, இனி நீ அஞ்சவேண்டுவதில்லை. என்மேல் ஆணையாகச் சொல்லுகிறேன். திருமாலும் பிரம்மனும் தொழுது பரவும் சிவாயநம எனும் ஐந்தெழுத்தை ஓதி அணிந்து கொள்ளப்படும் திருநீறு பிறவிக் கேதுவாகிய மயக்கத்தை விரிவாக்கும் இறத்தலைப் போக்கும் வழியையும் காண்பிக்கும்; பெரிய மயக்கத்தால் பிறரை மயங்கச் செய்கின்ற பேதைத் தன்மை பொருந்திய இளமகளிர்மேல் உண்டாகும் ஆசையைப் போக்கும். எ.று.
திருமாலும் பிரம்மனும் தமக்கு மேலாய சிவபரம்பொருளை வணங்கி வழிபடும் அபரதெய்வங்களாதலால் அவற்றால் நன்கு மதிக்கப்படுவது திருநீறு என்பது தோன்றத் திருமாலும் அயனும் தொழுதேத்தும் திருநீறு என்றும், சிவாய நம என்று வாயால் ஓதி அணியப்படுவது என்றற்கு “சிவாய நம என்று இடும் நீறு” என்றும் கூறுகின்றார். மக்கட்குண்டாகும் பிறப்பிறப்புக்கள் மலமயக்கத்தால் உளவாவதோடு மேலும் பிறத்தற்கு ஏதுவாம் அறிவை இருள்செய்து பிறக்கும் பிறவிகளில் தொடராவாறு மறைப்பது பற்றி “கருமால் அகற்றும் இறப்பு” என்று கூறுகின்றார். அகற்றுதல் - அகலமாக்குதல். மடங்கொன்று அறிவு அகற்றும் கல்வி என்றாற்போல (நீதி நெறி. வி.) பிறவியின் தொடக்கத்தில் உடன் தோன்றி அறிவொளியால் நீக்கமுறும் இருள் இறப்பின்கண் உயிரறிவின் ஒளியைப் போக்கி இருளே மிகுந்து விழுங்கி விடுதலின் “இறப்பினை விதந்து கருமால் அகற்றும் இறப்பு” என்றும், இறவா நிலை பயந்து இறப்பிருளைப் போக்கி உதவும் ஒளி நெறியை நல்குவது பற்றி “இறப்பதனைக் களையும் நெறியும் காட்டுவிக்கும்” என்றும் உரைக்கின்றார். உலகியலில் உடல் பொருள் உயிர் என்ற பொருள் மூன்றன்மேலும் உண்டாகும் ஆசை மயக்கம் பெருகி இளமை கனியுமிடத்துப் பெண்ணாசையாய் முறுகி நிற்றலின் அதனை ‘பெருமால்’ என்றும், அது மகளிர் உருவில் இடம் பெற்று இளமைக் காலத்து அழகும் ஒளியும் சிறந்து ஆடவர் மயங்கச் செய்வது கொண்டு மயக்குகின்ற “மடவார் நசை” என்றும், தமது இளமை மேனி நலத்தால் விளையும் தீங்கினை உணராவாறு இருண்டு நிற்கும் அறியாமை இயல்பை உடையராதல் பற்றி, “பேதை மடவார்” என்றும், அவர் மேல் உளதாகும் ஆசை “மடவார் ஆசை” என்றும், அதனைப் போக்குவது பற்றித், “திருநீறு மடவார் நசை அறுக்கும்” என்றும் அடிகளார் அறிவுறுத்துகின்றார்.
இதனால், சிவாய நம என ஓதி யணியும் திருநீறு நன் ஞானிகளான இனிய அடியரல்லாத மடவோர் கூட்டம் எய்தாவாறு பாதுகாக்கும் என்பதாம். (2)
|