836.

     வெய்ய வினையின் வேர்அறுக்கும்
          மெய்ம்மை ஞான வீட்டிலடைந்
     துய்ய அமல நெறிகாட்டும்
          உன்னற் கரிய உணர்வளிக்கும்
     ஐயம் அடைந்த நெஞ்சேநீ
          அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
     செய்ய மலர்க்கண் மால்போற்றும்
          சிவாய நமஎன் றிடுநீறே.

உரை:

     தெளிவின்றி ஐயமுற்று வருந்தும் நெஞ்சமே, இனி நீ அஞ்ச வேண்டாம். சிவாய நம என்று அணியப்படுவதும் சிவந்த தாமரை போலும் கண்களையுடைய திருமாலால் பரவப்படுவதும் ஆகிய திருநீறு கொடிய வினைகளின் வேரை அறுத்துவிடும் மெய்ம்மை பொருந்திய ஞான நிலையமாகிய வீட்டை அடைந்து உய்தி பெறுதற்குரிய தூய நெறியைக் காட்டுவதாம். அன்றியும் நினைத்தற்கரிய திருவருள் ஞான உணர்வையும் அளிக்கும். இதனை என்மேல் ஆணையிட்டுக் கூறுகின்றேன் காண். எ.று.

     அறிவின்கண் தெளிவு நிலவாதபோது, ஐயமாகிய இருள் படிந்து நெஞ்சை ஒன்றி நில்லாவாறு அலைத்து வருத்துவதால் நெஞ்சை நோக்கி “ஐயமடைந்த நெஞ்சே” என்றும், திருநீற்றால் தெளிவும் இன்பமும் எய்துவது உறுதி என்பாராய் “அஞ்சேல்” என்றும், என்மேல் ஆணை கண்டாய் என்றும் அறிவுறுத்துகின்றார். மனம் வாய் மெய் ஆகிய மூன்றாலும் தோன்றி உயிர்களைப் பிடித்துக் கொண்டு பயனை நுகர்ந்த வழி அல்லது நீங்காமல் உயிர் புகுமிடமெல்லாம் தானும் உடன் புகுந்து மயக்கும் கொடுமை உடைமை பற்றி “வெய்ய வினை”யென்றும், அதனை அறக் களையாதவிடத்துக் கிளைத்துக் கிளைத்துத் தீமை செய்வதுபற்றி “வேர் அறுக்கும்” என்றும் விளம்புகின்றார். சிவாய நம என்று இடப்படும் திருநீற்றின் பெருமை மேலும் கூறுவாராய் அது ஐயம் திரிபுகளால் விளையும் பொய்யான அஞ்ஞானத்தினை நீக்கி நிலைபெற்ற சிவஞான நிலையமாகிய வீட்டின்கண் சேர்ப்பித்து இன்புறுவிக்கும் வகையில் தூய நிர்மலமான சிவநெறியை விளங்கக் காட்டுவதாம் என்பது விளங்க “மெய்ம்மை ஞான வீட்டிலடைந் துய்ய அமல நெறி காட்டும்” என்று அறிவிக்கின்றார். பசுபாச ஞானங்கள் உணர்த்தும் நெறிகளில் நின்று உண்மை உணர்ந்து அதனை ஆழ்ந்து சிந்தித்தற்கு அரியதான திருவருட் சிவஞான நெறியில் எய்தும் நுண்ணுணர்வை இத் திருநீற்று நெறி நல்கும் என்பதற்காக, “உன்னற் கரிய உணர்வளிக்கும்” என்று உரைக்கின்றார். இனி, உலகியற் பொருள்களைக் கண்டு செயல் புரியும் வாய்ப்பளிக்கும் செவ்விய மலர் போன்ற புறக்கண்களிடத்தே உலக வாழ்வில் முதுமை எய்துமிடத்து வளர்ந்து பார்வையை மறைக்கும் மயக்கத்தையும் எய்தாதபடி பாதுகாப்பது இத் திருநீறு என்றறிக என்றுமாம்.

     இதனால், சிவாய நம என ஓதி யணியும் திருநீறு சிவஞானப்பேற்றுக்குரிய தெளிவும் நெறியும் நல்கும் என்பதாம்.

     (3)