837.

     கோல மலர்த்தாள் துணைவழுத்தும்
          குலத்தொண் டடையக் கூட்டுவிக்கும்
     நீல மணிகண் டப்பெருமான்
          நிலையை அறிவித் தருளளிக்கும்
     ஆல வினையால் நெஞ்சேநீ
          அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
     சீலம் அளிக்கும் திருஅளிக்கும்
          சிவாய நமஎன் றிடுநீறே.

உரை:

     அழகிய மலர் போன்ற திருவடி யிரண்டையும் பரவும் உயர்நிலைத் தொண்டினைப் புரியும் நல்வினைக்கண் செலுத்தும்; நீலமணி போலும் கழுத்தையுடைய சிவபெருமானது உண்மை நிலையை அறிவித்து அதனைப் பெறற்குரிய சிவஞானத்தை நல்கும்; விடம்போல் துன்புறுத்தும் வினைகட்கு நீ அஞ்சுதல் வேண்டா; நெஞ்சே, என்மேல் ஆணையாகச் சொல்லுகிறேன், கேள்; சிவாய நம என்று அணிந்து கொள்ளும் திருநீறு சைவ ஒழுக்கத்தையும் திருவருட் செல்வத்தையும் நல்கும் காண். எ.று.

     திருநீற்றைக் கைகள் எடுத்து அணியுமிடத்துச் சிவாய நம என்ற திருவைந்தெழுத்தை வாய் ஓதுதலின் “சிவாய நம என்று இடும் நீறு” என்கிறார். திருநீற்றை விரும்பியணியும் நன்னெறி சிவனுடைய திருவடி யிரண்டையும் நினைந்து வாழ்த்திப் பரவும் சிவநெறித் திருத்தொண்டாகிய உயரிய திருவருட் பணிக்கண் தன்னை யணிபவரை அடைவித்துச் சிவம் பெறுவிக்கும் சிறப்புப் பற்றிக் “குலத் தொண்டடையக் கூட்டுவிக்கும்” என்று இசைக்கின்றார். உயர்நிலைத் தொண்டு என்றற்குக் “குலத் தொண்டு” என்று குறிக்கின்றார். சிவன் கழுத்து நீலமணிபோல் ஆகியது. அப்பெருமானுடைய பேரருட் பெருநிலையை உணர்த்துதலால், “நீலமணிகண்டப் பெருமான் நிலையை அறிவித்து” என்றும், திருவருட் பெருநிலையை அறிந்தவிடத்துச் சிவஞானம் தோன்றிப் பேரின்பம் தருதல் விளங்க, “அருள் அளிக்கும்” என்றும் இயம்புகின்றார். ஆலவினை - ஆலமாகிய விடம்போலும் வினை. வினைவழி யியங்கும் இயல்பு கண்டு நெஞ்சினை, “ஆலவினையால் நெஞ்சே நீ அஞ்சேல்” என உரைத்து, நற்பயன் விளைவது உறுதியென்றற்கு “என்மேல் ஆணை கண்டாய்” என்று வலியுறுத்துகிறார் . ஞானப் பேற்றுக்கு இன்றியமையாத நல்லொழுக்கத்தைச் சீலம் என்றும், அது நல்கும் விழுப்பமாகிய சிவப்பேற்றைத் திரு என்றும் குறித்துச் “சீலமளிக்கும் திருவளிக்கும்” என்றும் புகல்கின்றார்.

     இதனால், சிவாய நம என்று ஓதியணியும் திருநீறு, சீலமும் திருவுமேயன்றிச் சிவபெருமானுடைய சிவானந்தப் பெருநிலையையும் தெரிவிக்க வல்லது என்பதாம்.

     (4)