838.

     வஞ்சப் புலக்கா டெறியஅருள்
          வாளும் அளிக்கும் மகிழ்வளிக்கும்
     கஞ்சத் தவனும் கரியவனும்
          காணற் கரிய கழல்அளிக்கும்
     அஞ்சில் புகுந்த நெஞ்சேநீ
          அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
     செஞ்சொல் புலவர் புகழ்ந்தேத்தும்
          சிவாய நமஎன் றிடுநீறே.

உரை:

     செவ்விய சொற்களையே மொழியும் புலவர் பெருமக்கள் புகழ்ந்தோதும் சிவாய நம என இடப்படும் திருநீறு, வஞ்சனை செய்து இடர்க்குட்படுத்தும் ஐம்புலன்களாகிய காட்டை வெட்டியழித்தற் கேற்ற கருவியாகிய அருள் வாளை யளித்து மகிழ்ச்சி பெறுவிக்கும்; தாமரையை இருக்கையாகவுடைய பிரமனும், கரிய நிறமுடைய திருமாலும் காண்டற்கியலாத சிவனுடைய கழலணிந்த திருவடியை பெறச் செய்யும்; ஐம்புல நெறிகளிற் புகுந்து வருந்துகின்ற நெஞ்சே, நீ இனி அஞ்சல் வேண்டா; என்மேல் ஆணை, காண். எ.று.

     புலன்கள் தரும் காட்சிகள் புறமும் அகமும் ஒப்பவில்லாமைப்பற்றி “வஞ்சப்புலம்” என்றும், காடுபோல் செறிவும் தீமையும் தன்னுட் கொண்டமை பற்றிப் “புலக்காடு” என்றும் கூறுகின்றார். புலக்காட்சிகளால் விளையும் வெப்பம் அருளறத்தால் தணிந்து கெடுமாறு கண்டு அதனைக் காட்டினை வெட்டியழிக்கும் வாளாக உருவகம் செய்கின்றார். புலன்களை வென்று வந்தார்க்கு இன்பம் தானே உண்டாதலின், அருள் வாள் அளிக்கும் என்ற வள்ளற் பெருமான் “மகிழ்வளிக்கும்” என்று இசைக்கின்றார். திருமால் பாச ஞானத்துக்கும், பிரமன் பசு ஞானத்துக்கும் குறியாதலால், இரண்டாலும் பெறப்படாத சிவஞானத்தைக் கூறற்கு, “கஞ்சத் தவனும் கரியவனும் காணற் கரிய கழல்” என்று கூறுகின்றார். திருவடி என்னாது கழல் என்றது, அசத்தினைத் தந்து அறிவை மறைக்கும் வினைகளைக் கழற்றி யெறிவ தென்றற்கு. “கழலா வினைகள் கழற்றுவ கால வனம் கடந்த அழலார் ஒளியன காண்க ஐயாறன் அடித்தலமே” என அப்ப மூர்த்திகள் அருளுவதறிக. அஞ்சு என்ற தொகைப் பெயர் ஐம்பொறிகள் மேற்று. திரி சொற்களை விலக்கிச் செஞ்சொற்களையே எடுத்துத் தொடுத்துப் பாடும் ஞானசம்பந்தர் முதலிய பெருமக்களை ஈண்டுச் “செஞ்சொற்புலவர்” எனவுரைத்து, அவர்கள் திருவைந்தெழுத்துக்களே பொருளாகப் பதியம் பாடிப் பரவினமையின் “செஞ்சொற் புலவர் புகழ்ந்தேத்தும் சிவாயநம என்று இடும் நீறு” எனப் போற்றி யுரைக்கின்றார்.

     இதனால், சிவாயநம என்று ஓதியணியும் திருநீறு புலவர் புகழும் பொற்பு வாய்ந்து, சிவபெருமானுடைய காண்டற்கரிய திருவடிக்காட்சி பெறுவிப்பது என்பதாம்.

     (5)