839.

     கண்கொள் மணியை முக்கனியைக்
          கரும்பைக் கரும்பின் கட்டிதனை
     விண்கொள் அமுதை நம்மரசை
          விடைமேல் நமக்குத் தோற்றுவிக்கும்
     அண்கொள் வினையால் நெஞ்சேநீ
          அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
     திண்கொள் முனிவர் சுரர்புகழும்
          சிவாய நமஎன் றிடுநீறே.

உரை:

     ஞானத்தால் திண்மையுற்ற முனிவர்களும் தேவர்களும் புகழ்ந்தணியும் சிவாயநம என்று வாயாற் சொல்லிப் பூசிக் கொள்ளப்படுகின்ற திருநீறு, கண்ணிற் பொருந்திய மணிபோலவும், மூவகைக் கனி போலவும் கரும்பு போலவும் கரும்பின் சாறுகொண்டு காய்ச்சிய கட்டி போலவும் ஒளியும் சுவையும் நல்குபவனும் தேவருலகத்து அமுதம் போல்பவனும், நம்மைப் பேணி புரக்கும் அரசனும் ஆகிய சிவபெருமான் விடைமேல் இவர்ந்து விளங்கும் காட்சியை நாம் பெறுவிக்கும். உயிரை அணுகிப் பிணிக்கும் வினைத்தொடர்பால் நீ அஞ்சுதல் வேண்டா; நெஞ்சே, என்மேல் ஆணையிட்டுச் சொல்லுகின்றேன். எ.று.

     சலியாத அறிவு பெற்றுப் பிறங்குமாறு புலப்பட, “திண்கொள் முனிவர்” என்றும், அவர் காட்டும் வழி நின்று ஒழுகுமாறு பற்றிச் சுரர் என்றும் சொல்லுகின்றார். தேவரும் முனிவரும் உய்தி வேண்டி ஓதும் முறைமை தோன்ற, “முனிவர் சுரர் புகழும் சிவாய நம” என உரைக்கின்றார். கண்ணின்கண் இருந்து பார்வைக்குரிய ஒளிதரும் பண்புடைய மணியென்றற்குக் “கண்கொள் மணி” என்கின்றார். முக்கனி - மா, பலா, வாழை. கரும்பின் கட்டி இந்நாளில் வெல்லம் எனப்படுகிறது. உமாதேவி இடப்பாகத்தே வீற்றிருக்க விடையின்மேல் சிவன் தோன்றும் காட்சி காண்டற்கு மிக்க இன்பம் தருவதாதலின், “விடைமேல் நமக்குத் தோற்றுவிக்கும்” என்று இயம்புகின்றார். உயிரின்கட் கிடந்து அது புகும் உடம்பு தோறும் தொடர்ந்து செல்வது பற்றி, வினையை “அண்கொள் வினை” என்று இசைக்கின்றார். அண்கொளல் - அணுகுதல். அறிவை மயக்கி நெறி பிறழ்ந்து துன்புறச் செய்யும் என எண்ணி நெஞ்சு வினைக்கு அஞ்சுதலின், “வினையால் நெஞ்சே நீ அஞ்சேல்” என விளம்புகின்றார்.

     இதனால், சிவாய நம என்று ஓதியணியும் திருநீறு சிவபெருமான் விடைமேல் தோன்றும் இனிய காட்சியைக் கண்டு மகிழச் செய்யும் என்பதாம்.

     (6)