84.

    கஞ்சன் துதிக்கும் பொருளே யென்
        கண்ணே நின்னைக் கருதாத
    வஞ்சர் கொடிய முகம் பார்க்க
        மாட்டே னினியென் வருத்தமறுத்
    தஞ்சலென வந்த ருளாயேல்
        ஆற்றேன் கண்டாய் அடியேனே
    செஞ்சந் தனஞ்சேர் தணிகை மலைத்
        தேனே ஞானச் செழுஞ் சுடரே.

உரை:

     செவ்விய சந்தன மரங்கள் வளர்ந்துள்ள தணிகை மலையில் எழுந்தருளும் தேன் என இனிக்கும் ஞானச் செழுஞ் சுடராகிய முருகப் பெருமானே, பிரமன் வணங்கித் துதிக்கும் மெய்ப்பொருளே, என் கண்ணே, நின்னுடைய திருவடியை நினைக்காத வஞ்ச நெஞ்சர்களின் கொடுமை பொருந்திய முகத்தைக் கண்ணெடுத்துப் பார்க்க மாட்டேனாதலால் எனது வருத்தத்தைப் போக்கி அடியேன் முன் வந்தருளி அஞ்சேல் என்று அருளுக; மேன்மேல் மிகும் வருத்தத்தை ஆற்றேனாகின்றேன், எ. று.

     குறிஞ்சி நிலத்து மரமாதலின் “செஞ்சந்தனம் சேர் தணிகைமலை” என்று குறிக்கின்றார். கஞ்சம் - தாமரை; அதனால் தாமரையில் இருக்கும் பிரமனைக் “கஞ்சன்” என்று கூறுகிறார். பிரமன் நாளும் மறை யோதுபவனாதலால், அம்மறைகள் உரைக்கும் மெய்ப்பொருள் முருகப் பெருமானாதல் காட்டக் “கஞ்சன் துதிக்கும் பொருளே” எனக் குறிக்கின்றார். முருகனாகிய உண்மைப் பொருளை நினையாத நெஞ்சம் பொய்யும் வஞ்சனையும் நிறைந்து முகத்தால் கொடுமைத் தன்மையைப் புலப்படுத்தி நிற்றலால், “நின்னைக் கருதாத வஞ்சர் கொடிய முகம் பார்க்க மாட்டேன்” என்று கூறுகிறார். வஞ்சரின் கொடிய காட்சியும் உறவும் துன்பத்துக் கேதுவாதலால், இனி என்பால் நின்று வருத்தும் துன்பத்தை நீக்கி யருள்க என வேண்டுவாராய், “இனி என் வருத்தம் அறுத்து அஞ்சல் என்று அருள்க” எனவும், அருளாவிடில் மிக்குறும் வருத்தத்தை ஆற்றும் வலி யிலேன் என்பார், “அருளாயேல் ஆற்றேன் கண்டாய்” எனவும் கூறுகின்றார்.

     இதனால், அஞ்சேல் என்று அருளா தொழியின் மிக்கு வரும் துன்பம் பொறேன் என முறையிட்டவாறாம்.

     (3)