840. நோயை அறுக்கும் பெருமருந்தே
நோக்கற் கரிய நுண்மைதனைத்
தூய விடைமேல் வரும்நமது
சொந்தத் துணையைத் தோற்றுவிக்கும்
ஆய வினையால் நெஞ்சேநீ
அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
சேய அயன்மால் நாடரிதாம்
சிவாய நமஎன் றிடுநீறே.
உரை: செய்தீட்டிய வினைகளால் வருந்தும் நெஞ்சமே, நீ அஞ்ச வேண்டா; என் மேல் ஆணையாக வுரைக்கின்றேன்; உயர்ந்த உலகத்துப் பிரமனும் திருமாலும் நாடிப் பெறற்கரியதாகிய சிவாயநம என்று ஓதியணியும் திருநீறு, பிறவி நோயைப் போக்கவல்ல பெருமை சான்ற மருந்தாகியவனும், ஞான நாட்டம் கொண்டு முயன்றாலும் நோக்குதற்கரிய நுண்ணியனும், தூய விடைமேல் இவர்ந்துவரும் துணைவனுமாகிய சிவபெருமானை நம்முள் போந்தருளிக் காட்சிதருமாறு செய்ய வல்லதாம். எ.று.
மனம், மொழி, மெய் என்ற முக்கரணங்களால் செய்யப்பட்டுப் பயன் நுகரப்படாத வினை, “ஆயவினை” என்று குறிக்கப்படுகிறது. வினைத்தொடர்பு அறிவைச் சூழ்ந்து மயக்க வல்லதாகலின், “ஆய வினையால் நீ அஞ்சேல் நெஞ்சே” என்று அறிவுறுத்துகின்றார். பிரமனும் திருமாலும் முறையே பிரம உலகம், வைகுந்தம் ஆகிய உலகுகளில் உள்ளவராதலால், அவர்களைச் “சேய அயன்மால்” என்று தெரிவிக்கின்றார். “பிறவியினும் பெரிய நோய் வேறு இல்லாமையால் “நோய்” என்றும், அதனைத் திருவடி காட்டிப் போக்குதலால் சிவபெருமானைப் “பெருமருந்து” என்றும் பரவுகின்றார். புறம் அகம் என்ற நோக்கம் இரண்டனுள் சிந்தையில் நாடும் நோக்கமாகிய அகநோக்கம் சீரியதென்பது பற்றி அதனை நோக்கம் என்று கொண்டு, அந்த நோக்கமும் எட்டியறியவியலாத நுண்ணியன் என்றற்கு “நோக்கற்கரிய நுண்மை” என்று இறைஞ்சுகின்றார். விடையேறும் பெருமானாகிய அவன் அறிவுடைய மக்களாகிய நம்பால் பேரன்புடையவன் என்பது தோன்ற, “நமது சொந்தத் துணை” என்று சொல்லுகிறார். சொந்தம், பத்தொன்பதாம் நூற்றாண்டில் செய்யுளுலகிற் புகுந்த புதுச்சொல்; உரிமை என்ற பொருளுடையது.
இதுவும் திருநீறு சிவனது விடைமேல் விளங்கும் காட்சியைக் காணும் பேற்றை நல்கும் என்று கூறுகிறது. (7)
|