841. எண்ண இனிய இன்னமுதை
இன்பக் கருணைப் பெருங்கடலை
உண்ண முடியாச் செழுந்தேனை
ஒருமால் விடைமேல் காட்டுவிக்கும்
அண்ண வினையால் நெஞ்சேநீ
அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
திண்ண மளிக்கும் திறம்அளிக்கும்
சிவாய நமஎன் றிடுநீறே.
உரை: அறிவுக்குத் திண்மையும் மனத்துக்கு செய்திறமும், அளிப்பதாகிய சிவாய நம என ஓதியணியும் திருநீறு என்றற்கு இனிய இன்னமுதம் போன்றவனும், இன்பம் தரும் கருணையாகிய பெருங்கடல் போன்றவனும், வாயால் உண்டு மகிழ்தற்கு அமையாத செழுமையான தேன் போன்றவனுமாகிய சிவபெருமானை ஒப்பற்ற, பெரிய விடைமேல் விளங்கும் நிலையிற் கண்டு இன்புறச் செய்யும்; இதுபற்றி வினை மயக்கத்தால் நெஞ்சமே நீ அஞ்ச வேண்டா; என்மேல் ஆணையாக வுரைக்கின்றேன். எ.று.
எண்ணுமிடத்து எண்ணத்தின்கண் இனிய ஞானத் தேன் ஊறுவது பற்றி, “எண்ண இனிய அமுதை” என எடுத்திசைக்கின்றார். “சிந்திப்பவர்க்குச் சிறந்து செந்தேன் முந்திப் பொழிவன” என நாவரசர் உரைக்கின்றார். வழங்கக் குறைபடாது எப்போதும் நிறைந்து நிற்றலால், “கருணைப் பெருங்கடல்” என்றும், அதனால் இன்பமே விளைவது கண்டு “இன்பக் கருணைப் பெருங்கடல்” என்றும் இயம்புகின்றார். உண்டு மகிழ்தற்குரியது உலகில் பெறப்படும் செந்தேன்; சிவ பரம்பொருள், தேனினும் சிறந்த இன்பமயமாதலின், “உண்ண முடியாச் செழுந்தேன்” என்று உரைக்கின்றார். இவ் வியல்பினனாகிய சிவபெருமானை உமையொடு கூடிய சகளத் திருவுருவில் விடையின்மேல் எழுந்தருளும் காட்சி நல்கச் செய்யும் நலன் சான்றது திருநீறு என்பாராய், “ஒருமால் விடைமேல் காட்டுவிக்கும்” என இசைக்கின்றார். உயிர்க்கு அணிமையில் இருந்து செவ்வி வாய்க்கும்போது தன் பயனை ஒழியாது நுகர்விக்கும் ஓட்டமுடையது வினையாதலால் அதனை “அண்ணவினை” என்றும் அதனால் உயிரறிவு மயங்கிச் செயற்பட்டு வினைப்பயன் நுகர்ச்சியில் தோய்ந்து மேன்மேலும் வினைவாய்ப்படுவது அறிந்து நெஞ்சு வருந்துவது கண்டு, “நெஞ்சே நீ அஞ்சேல்” எனவும், “என்மேல் ஆணை” யெனவும் அறிவுறுத்துகிறார். திண்மை - திண்ணமென வந்தது. திறம் - செயல்வகை. திண்மை அறிவின் மேலும், திறம் செயல் மேலும் நிற்பனவென அறிக.
இதனால், சிவாய நம என்று ஓதி யணியும் திருநீறு அறிவுக்குத் திண்மையும் மனத்துக்கு வினைசெயல் திறமும் நல்கும் என்பதுடன், விடைமேல் விளங்கும் சிவக்காட்சியைக் காணும் பேற்றினையும் அளிக்கும் என்பதாம். (8)
|