842.

     சிந்தா மணியை நாம்பலநாள்
          தேடி எடுத்த செல்வமதை
     இந்தார் வேணி முடிக்கனியை
          இன்றே விடைமேல் வரச்செயும்காண்
     அந்தோ வினையால் நெஞ்சேநீ
          அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
     செந்தா மரையோன் தொழுதேத்தும்
          சிவாய நமஎன் றிடுநீறே.

உரை:

     அந்தோ நெஞ்சே, வினையை நினைந்து அஞ்சுவதை ஒழிக; என்மேல் ஆணையாகச் சொல்லுகின்றேன்; அது கெடுதற்குரியது; செந்தாமரையோனாகிய பிரமன் தொழுது பரவியோதும் சிவாய நம என்பதை வாயில் ஓதி மெய்யில் அணிந்து கொள்க; அது செய்யும் நலத்தைக் கேள்; சிந்தாமணி யொப்பவனும், நான் பன்னாள் அலைந்து தேடிப் பெற்ற செல்வம் போல்பவனும், சந்திரனை யணிந்த சடையை முடியிலே கொண்ட கனி போல்பவனும் ஆகிய சிவபெருமானை இப்பொழுதே விடைமேல் இவர்ந்து வந்து நமக்குக் காட்சி நல்க வல்லது என உணர்க. எ.று.

     சிந்தாமணி - தேவருலகில் வழங்கும் மணிவகை. நாளடைவில் தேய்ந்து ஒளி மழுங்கும் உலகியல் மணிவகை போலாது என்றும் தேயாமாயச் சிறப்புடைய மணி என்றற்குச் “சிந்தாமணி” என்பர். இதனைக் காப்பியப் புலவர் தம் கற்பனைக் கண்ணிற் கட்டுரைப்பதன்றி, உலகவர் எங்கும் எப்போதும் கண்டதில்லை. சிவபெருமான் அதுபோல் அருமையும் ஒளியும் நிறமும் உடையனென்றதற்கு அவனைச் “சிந்தாமணி” என்று சிறப்பிக்கின்றார். தேடாத செல்வத்தின்பால் பற்றும் பேணிப் போற்றும் திறமும் மக்கள் உள்ளத்தில் எழுவதில்லை; புறக்கணிப்பது இயல்பு; சிவபரம்பொருள் அத்தகையதென்றற்கு “நாம் பலநாள் தேடி எடுத்த செல்வம்” என நயந்துரைக்கின்றார். இந்து - ஈண்டுப் பிறைத் திங்கள், வேணி - சடை. இனிமை யுடைமை பற்றி, “கனி” எனல் வேண்டிற்று. விடையிவர்ந்து வரும் சிறப்புப்பற்றி “விடைமேல் வரச்செய்யும்” என்று கூறுகின்றார். வினை மாசு போந்து மறைத்துச் சிவசுகத்தைப் பெறாதவாறு தடுக்குமென அஞ்சற்க என வற்புறுத்தற்கு “வினையால் “நெஞ்சே நீ அஞ்சேல்” எனவும், என்மேல் ஆணைகண்டாய் எனவும் இயம்புகின்றார். செந்தாமரையோன் - திருமால். வேதம்போற்றும் வித்தகனாதலால், அதன்கண் நுண்ணிதின் உணர நிற்பது பற்றித் திருவைந் தெழுத்தோதி யணியப்படும் திருநீற்றைச் “செந்தாமரையோன் தொழுதேத்தும் சிவாயநம என்றிடும் நீறு” என்று தெரிவிக்கின்றார்.

     இதனால், சிவன் விடைமேல் தோன்று காட்சியைக் காணும் திறத்தைச் சிவாயநம என்று இடும் நீறு நல்கும் என உரைக்கின்றதென்பதாம்.

     (9)