843.

     உள்ளத் தெழுந்த மகிழ்வைநமக்
          குற்ற துணையை உள்உறவைக்
     கொள்ளக் கிடையா மாணிக்கக்
          கொழுந்தை விடைமேல் கூட்டுவிக்கும்
     அள்ளல் துயரால் நெஞ்சேநீ
          அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
     தெள்ளக் கடலான் புகழ்ந்தேத்தும்
          சிவாய நமஎன் றிடுநீறே.

உரை:

     தெளிந்த கடலையிடமாகவுடைய திருமால் புகழ்ந்து பரவும் திருநீறு, உள்குவார் உள்ளத்தில் தோன்றி மகிழ்வுறுத்துபவனும் நமக்கெல்லாம் உற்ற துணையாகுபவனும், உள்ளமார்ந்த உறவினனும், பிறர் கொடுக்கக் கொள்ளப்படாத மாணிக்கக் கொழுந்தை ஒப்பவனுமாகிய சிவபெருமானை விடைமேல் தோன்றும் விழுமிய கோலத்தில் நாம் காணச் செய்ய வல்லதாகும்; கரிய சேறு போன்ற துயரத்திற் கிடந்து வருத்துதலால் நெஞ்சமே பெறலரிது என்று அஞ்சி வருந்துகின்றாய்; அஞ்சுதல் வேண்டா; என் மேல் ஆணை காண். எ.று.

     சிந்திப்பார் சிந்தனைக்கண் தேனூறி மகிழ்விக்கும் சிறப்புப்பற்றிச் சிவனை “உள்ளத்தெழுந்த மகிழ்வை” என்று இயம்புகின்றார். மகிழ்வு - தேன். எக்காலத்தும் எவ்விடத்தும் துணையாயுற்று நன்மை புரிவது பற்றி “நமக்கு உற்ற துணை” என்று சொல்லுகின்றார். முகநக வந்துறும் உறவினர் போலாது, உள்ளமார்ந்த உயர்ந்த உறவாகுபவன் சிவன் என்றற்கு “உள்ளுறவு” என உரைக்கின்றார். மாணிக்கம் - செம்மணி. இளமைச் செவ்வியில் உள்ள மணி தண்ணொளியும், கவர்ச்சியும் உடையதாம். உறுவிலை கொடுப்பார்க்கு அது கிடைக்கும். அம் மணியினும் சிறந்த நிறமும் ஒளியும் உடைய சிவபரம்பொருள் பிறர் கொடுக்கக் கொள்ளப்படாத உயர்வுடைமை பற்றிக் “கொள்ளக் கிடையா மாணிக்கக் கொழுந்து” என்று குறிக்கின்றார். சிவபரம்பொருளை, விடை விளங்கக் காட்டும் வீறுபெற்றது சிவாயநம என ஓதி யணியப்படும் திருநீறு என்று வடலூரடிகள் வற்புறுத்திக் கூறுவதைக் கேளாது ஐயுற்றலையும் நெஞ்சினை நோக்கி “நெஞ்சமே, நீ ஐயுற்றஞ்சுதற்கு அழுகிய சேறு போலும் துயரத்தில் வீழ்ந்து வருந்தினமை காரணம் என்பாராய், “அள்ளல் துயரால் அஞ்சேல்” என்றும், என்மேல் ஆணை யென்றும் இசைக்கின்றார். தெளிந்த நீரைத் தெள்ளம்புனல் என்பதுபோல இங்குத் தெள்ளக்கடல் என வழங்குகின்றார். கடலகத்தே பாம்பணையில் துயில் கொள்வது பற்றித் திருமாலைத் “தெள்ளக் கடலான்” என்று சிறப்பிக்கின்றார்.

     இதனால், விடைமேல் காணப்படும் சிவக் காட்சியைக் காணும் திறம் பெறலாம் என்பது விளக்கப்படுகிறது.

     (10)