844. உற்ற இடத்தில் உதவநமக்
குடையோர் வைத்த வைப்பதனைக்
கற்ற மனத்தில் புகுங்கருணைக்
கனியை விடைமேல் காட்டுவிக்கும்
அற்றம் அடைந்த நெஞ்சேநீ
அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
செற்றம் அகற்றித் திறல்அளிக்கும்
சிவாய நமஎன் றிடுநீறே.
உரை: இடுக்கண் உற்றபோது உதவுதற்கெனச் செல்வர் திரட்டி வைத்த வைப்புநிதி போல்பவனும், நன்னூல் பலவற்றையும் நன்றாகக் கற்றவர் உள்ளத்திற் புகுந்து அருளுதலையுடைய கனி போன்றவனுமாகிய சிவபிரானை விடைமேற் போந்து காட்சி தரச்செய்ய வல்லதாகும். மனத்தின்கண் நிலவும் பகையுணர்வை அகற்றி அன்பு செய்யும் ஆற்றலை நல்கும் சிவாயநம என ஓதியணியும் திருநீறு என்று உரைக்கவும், குறையுற்றமையால் அஞ்சி வருந்தும் நெஞ்சமே என்மேல், ஆணையாக வுரைக்கின்றேன், நீ இனி அஞ்சுதல் வேண்டா. எ.று.
உற்ற இடம் - பொருள் கருவி முதலியவற்றால் இடுக்கண் பட்ட இடம். பொருள் இடம் முதலியவற்றின் குறைபாட்டால் செய்பொருள் நிறைவுறாவாறு இடுக்கண் பட்டவிடத்து, பொருள் கிடைக்குமாயின் இடுக்கண் இன்றி யாவும் இனிது முடியும் என்பது உலகியல் உணர்த்தும் உண்மை. உற்றவிடத்து உதவும் பொருள் போலச் சிவபரம் பொருள் உண்மைத் தொண்டு புரிவோர்க்கு இடமறிந்து உதவியூக்கும் ஒண்மையுடைத் தென்பதை நாம் உணர்தற் பொருட்டு, “உற்ற இடத்தில் உதவ நமக்கு உடையோர் வைத்த வைப்பு” என அடிகளார் உரைக்கின்றார். திருஞானசம்பந்தர் சிவன் “கல்லார் நெஞ்சில் நில்லான்” என்பர்; எனவே கற்றவர் நெஞ்சிற் புகுந்து நிற்பன் என்பது பெறப்படுதல் கொண்டு, “கற்ற மனத்தில் புகும் கருணைக் கனி” என்று வியந்து கூறுகின்றார். கற்றார்பால் பெருங்கருணை செய்வது சிவனது சிறப்பியல்பு என்பது பற்றி, “கருணைக் கனி” என்று இசைக்கின்றார். அறிவன தெளிய அறிதற் கேற்ற அமைதியின்றிக் குறைபட்டமை புலப்பட, “அற்றம் அடைந்த நெஞ்சே” என்றும், குறையுற்ற உள்ளத்தில் அச்சமும் அவலமும் புகுந்து அலைப்பது இயல்பாதலால், அச்சம் தீர, “அஞ்சேல்” எனவும் கூறுகின்றார். செற்றம் - பகையுணர்வு. நெஞ்சின் கண் அவ்வுணர்வு இடம்பெறுமாயின், ஈரமாகிய அன்புணர்வு கெடும்; இரக்கமற்ற செய்கைக்குரிய அரக்கப் பண்பு தோன்றி இருமையும் கெடுத்தழிக்கும் என்பதுபற்றி, “செற்றம் அகற்றித் திறல் அளிக்கும்” என்று செப்புகின்றார்.
இதனாலும், செற்றம் போக்கித் திறல் அளிக்கும் திருநீறு விடைமேல் விளங்கும் சிவக்காட்சியைப் பெறுவிக்கும் என்று கூறப்படுகிறது. (11)
|