846. வாடக்கற் றாய்இஃ தென்னைநெஞ்
சேயிசை வாய்ந்தசிந்து
பாடக்கற் றாய்இலை பொய்வேடம்
கட்டிப் படிமிசைக்கூத்
தாடக்கற் றாய்இலை அந்தோ
பொருள்உனக் கார்தருவார்
நீடக்கற் றார்புகழ் ஒற்றிஎம்
மானை நினைஇனியே
உரை: நெஞ்சமே, பெருநூல்களை நெடிது கற்றவர் புகழ்கின்ற திருவொற்றியூரில் எழுந்தருளும் சிவபெருமானை நினைக்கக் கல்லாமல், நோயும் வறுமையும் வந்தால் வாடி வருந்தக் கற்றுள்ளாய்; எளிதிற் பாடற்கமைந்த சிந்துகளையும் பாடக் கற்றிலை; மண்ணின்மேல் பொய் வேடம் பூண்டு கூத்தாடக் கற்றதும் இல்லை; இங்ஙனமிருக்க, ஐயோ உனக்குப் பொருளுதவி செய்பவர் யார் இருக்கின்றார்கள்? ஒருவரும் இல்லையாதலால் என்னோடு இசைந்தொழுகுவாயாக. எ.று.
நெடிது கற்றாலன்றி, இடையில் உளவாகும் ஐயங்களும் திரிபுகளும் ஏங்கித் தெளிவெய்தலாகாமையின், அந்நெறியில் தெளிவுற்றார் புகழும் சிறப்புடையது திருவொற்றியூர் என்றற்கு, “நீடக் கற்றார் புகழ் ஒற்றி” என்றும், அவ்வூர்ப் பெருமானுக்கே எழுத்தறியும் பெருமான் என்பது பெயராதலின் இங்ஙனம் கற்றல் வேண்டும் என்றும் கூறுகின்றார். நோயும் வறுமையும் வந்தால், அவற்றிற்குக் காரணமே சிவபெருமான் திருவருளை நினையாமை என்பதை யெண்ணாமல் வருத்துகிற துன்பத்தையே எண்ணி வருந்துமாற்றை அறிந்திருக்கிறாய்; காரண காரியம் கருதாமை என்னே எனக் கழறுவார், “வாடக் கற்றாய் இஃதென்னை” என்று கூறுகின்றார். துன்பக் காரணத்தை எண்ணாவிடினும், அதனை நீக்கும் கருவியாகிய சிந்து பாடவேனும் கல்லாதிருக்கின்றாய் என்றற்கு, “வாய்ந்த சிந்து பாடக் கற்றாயிலை” எனவும், பாடத் தெரியவில்லையாயின் பொய் வேடம் பூண்டு ஆடவேணும் கற்றிருத்தல் வேண்டும்; அதனையும் செய்தாயில்லை என்றற்குப் “பொய் வேடங்கட்டிப் படிமிசைக் கூத்தாடக் கற்றாயிலை” எனவும் கூறுகின்றார். இம்மையில் துன்ப நீக்கத்திற்கு வாய்த்த மருந்தாவது பொருள்; அதனை இவ்விரண்டால் எளிதாற் பெறலாம் என்பார், “அந்தோ பொருள் உனக்கார் தருவார்” என்று புகல்கின்றார். வாய்ந்த சிந்து என்கிறார் சீர்வகையாலும் தளை வகையாலும் யாத்தல் எளிதாகலின், வேடமும் வேடம் பூண்டோரும் உண்மை நிலையில் வேறுபடுதலால் “பொய் வேடம்” என்கின்றார். இவ்வகையில் ஒன்று மறியாவிடினும், நெஞ்சால் நினைத்தலேனும் செய்க என்பார் “இனி ஒற்றி எம்மானை நினை” என அறிவருளுகிறார்.
இதனால், துன்பம் வந்த காலத்து வாட்டமுறாது நெஞ்சால் இறைவனை நினைத்தல் வேண்டும் என நெஞ்சுக்கு அறிவுறுத்தவாறாம். (2)
|