848. நேரா அழுக்குத் துணியாகில்
உன்றனை நேரில்கண்டும்
பாரா தவர்என நிற்பார்
உடுத்தது பட்டெனிலோ
வாரா திருப்பதென் வாரும்என்
பார்இந்த வஞ்சகர்பால்
சேராது நன்னெஞ்ச மேஒற்றி
யூரனைச் சேர்விரைந்தே.
உரை: நல்ல நெஞ்சமே, நீ உடுத்தது அழுக்குத் துணியாயின் உன்னைக் கண்ணார நேரிற் கண்டாலும் நெருங்கிய நண்பரும் உன்னைப் பார்க்காதவர் போல் ஒதுங்கி நிற்பர்; உடுத்திருப்பது உயர்ந்த பட்டாடையாயினும் ஒதுங்கி நின்றாலும் உன்னிடம் தாமே வலிய வந்து நீங்கள் வாராதிருப்பதேன்? வருக என்று அழைப்பர்; இத்தகைய வஞ்சம் கொண்ட நெஞ்சையுடைய உலகினர்பால் செல்வதும் சேர்வதுமின்றித் தனியே திருவொற்றியூர்ப் பெருமானை விரைந்து சென்று சேர்வது நலம் பயக்குமென அறிக. எ.று.
உடுக்கும் உடை உடையவனது உடமை நலத்தை எடுத்தோதுதலின் உடுக்கும் உடையை விதந்தோதுகிறார். “ஆள் பாதி ஆடை பாதி” என்பது உலகு வழக்கு. எத்தகைய எளியவர்க்கும் அழுக்குடைய ஆடை யாகாதாகலின் “நேரா அழுக்குத் துணி” என்கின்றார். துணிஎன்ற சொல்லாற் கிழிந்த உடையாதல் பெறப்படும். உடையில் ஏறிய அழுக்குக் காண்பார் கருத்தை மாற்றுதலின், “கண்டும் பாராதவர் என நிற்பார்” என்றுரைக்கின்றார். பட்டுடுப்பது செல்வர்க்கே இயல்வதாகலின், “செல்வரை எல்லாரும் செய்வர் சிறப்பு” (குறள்) என்ற கொள்கையால், “பட்டெனிலோ வாரா திருப்பதென் வாரு மென்பார்” எனவும், பட்டுடுத்த செல்வரை உலகவர் வரவேற்கும் முறை இதுவென்று காட்டுவாராய், “வாரா திருப்பதென் வாரு மென்பார்” எனவும் மொழிகின்றார். உண்மை யன்பு கலந்த வரவேற்பு அன்று என்பது விளங்க “இந்த, வஞ்சகர்” எனச் சுட்டிக் காட்டுகின்றார். இவரோடு சேர்ந்து செல்லின். நெஞ்சமும் வஞ்சங் கலந்து நஞ்சின் இயல்பிற்றா மாதலின், “சேராது ஒற்றியூரனைச் சேர்” என்று தெரிவிக்கின்றார். “விரைந்து” என்கிறார் வஞ்சரினம் வந்து கலந்து கொள்ளு மென்பதற்கு.
இதனால், வஞ்சகரியல்பு கூறி நெஞ்சினை நல்வழிப் படுத்தியவாறு. (4)
|