85.

    மின்னே ருலக நடையதனால்
        மேவுந் துயருக் காளாகிக்
    கன்னேர் மனத்தேன் நினை மறந்தென்
        கண்டேன் கண்டாய் கற்பகமே
    பொன்னே கடவுண் மாமணியே
        போதப் பொருளே பூரணமே
    தென்னேர் தணிகை மலையரசே
        தேவே ஞானச் செழுஞ்சுடரே.

உரை:

     அழகார்ந்த தணிகையில் வீற்றிருக்கும் அருளரசனே! தெய்வமே, ஞானச் செழுஞ்சுடரே, கற்பகமே,. பொன்னே, தெய்வ மணியே, ஞானப் பொருளே, பூரணமே, மின்னலைப் போல் நிலையின்றி மறையும் உலக வாழ்வில் வந்தடையும் துன்பத்துக்கு உள்ளாகி மனம் கல்லாகி நின் திருவடியை மறந்து என்ன பயனைக் கண்டேன், ஒன்றுமில்லை, எ. று.

     தென் - அழகு. தேவு - தெய்வம். கடவுளரில் தலைசிறந்து விளங்குவது பற்றிக் “கடவுள் மாமணியே” என்று உரைக்கின்றார். ஞானமே யுருவாகிய பொருள் என்றற்குப் “போதப் பொருளே” என்று புகல்கின்றார். “ஞானந்தான் உருவாகிய நாயகன்” (3 : 21 : 128) எனக் கந்தபுராணம் உரைப்பது காண்க. பூரணம் - நிறைவு. குறைவிலா நிறைவே என்று சொல்லி வணங்குவதும் முந்தையோர் நெறியாதலால், “பூரணமே” என்று துதிக்கின்றார். “குறைவிலா நிறைவே குணமில் குணமே என்று முறையினால் வணங்குமவர் முன்னெறி காண்பரே” (மங்கலக்குடி) என ஞானசம்பந்தர் உரைப்பது காண்க. நிலையின்றிப் பொய்க்கும் இயல்பின தாதலால், உலகியலை “மின்னேர் உலக நடை” என்று கூறுகிறார். “நில்லாத உலகியல்பு” (திருநாவுக்) எனச் சேக்கிழார் பெருமான் எடுத்து மொழிவது காண்க. இதன் இயல்புணராது நிலையாய தென்றெண்ணித் துன்பத்துக் காளாவது மாந்தர் இயல்பாதல் காண்டலின், “மேவும் துயருக் காளாகி” என்றும், இரக்கமில்லாத மனமுடையவனாயினேன் என்பார், “கன்னேர் மனத்தேன்” என்றும், இதனால் அருளின்ப வடிவாகிய இறைவனை மறந்தமையும் துன்பமே விளைந்தது மெண்ணி, “நினைமறந்து என் கண்டேன்” என்றும் உரைக்கின்றார்.

     இதனால், உலக நடையை மெய் யென்றெண்ணித் துன்பத்துக் காளானமை சொல்லி முறையிட்டவாறாம்.

     (4)