850.

     வாழைக் கனிஉண மாட்டாது
          வானின் வளர்ந்துயர்ந்த
     தாழைக் கனிஉணத் தாவுகின்
          றோரில் சயிலம்பெற்ற
     மாழைக் கனிதிகழ் வாமத்தெம்
          மான்தொண்டர் மாட்டகன்றே
     ஏழைக் கனிகர் உளத்தினர்
          பாற்சென்ற தென்னைநெஞ்சே.

உரை:

     நெஞ்சமே, இமயமலையரசன் பெற்ற மாவின் கனி போன்ற உமாதேவியிருந்து விளங்கும் இடப்பாகத்தை யுடைய எம்பெருமானாகிய சிவனுடைய மெய்த்தொண்டர்களை நாடாது நீங்கி, நிலத்தில் இனிது வளர்ந்து நன்கு பழுத்திருக்கும் வாழைப் பழத்தை யுண்ண விரும்பாமல் வானளாவி உயர்ந்திருக்கும் தெங்கின் முற்றிய காயை யுண்டற்கு ஆசைப்படுவாரைப் போல, அறிவில்லாத ஏழையாய்க் கல்லையொத்த மனமுடையராய் உள்ளவரிடம் ஏன் செல்லுகின்றாய்? என்னோடு இசைந்து வருக. எ.று.

     சயிலம் - இமயமலை. மாழைக் கனி - மாங்கனி. ஈண்டு அன்மொழித் தொகையாய் உமாதேவி மேலதாயிற்று. வாமம் - இடப்பக்கம். பெறற்கெளிமையும் உண்டற்கு நனியினிமையு முடைமை பற்றி “வாழைக் கனி” யென அடைகொடாது சிறப்பித் தோதுகின்றார். தாழைக் கனி - முற்றிய தேங்காய். இதனைத் தெங்கம் பழம் எனச் செப்புவ துண்மையின் “தாழைக் கனி” என்கின்றார். சிவத்தொண்டர்பால் அன்பால் மென்மையும், ஞானத்தாற் கனிவும் நிறைந்திருத்தலின், அவர்க்கு வாழைக் கனியை உவமம் செய்கின்றார். கன்னிகர் என்பது செய்யுள் நோக்கிக் “கனிகர்” என வந்தது.

     இதனால், சிவஞானிகளாகிய தொண்டரோடு கூடுக என நெஞ்சுக்கறிவுறுத்தவாறு.

     (6)