எண

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

852.

     துட்ட வஞ்சக நெஞ்சக மேஒன்று
          சொல்லக் கேள்கடல் சூழ்உல கத்திலே
     இட்டம் என்கொல் இறையள வேனும்ஓர்
          இன்பம் இல்லை இடைக்கிடை இன்னலால்
     நட்ட மிக்குறல் கண்டுகண் டேங்கினை
          நாணு கின்றிலை நாய்க்குங் கடையைநீ
     பட்ட வன்மைகள் எண்ணில் எனக்குடல்
          பதைக்கும் உள்ளம் பகீல்என ஏங்குமே.

உரை:

     துட்டத் தன்மையும் வஞ்ச நினைவுகளுமுடைய மனமே, ஒன்று சொல்கிறேன், கேள்; கடல் சூழந்த இம்மண்ணுலகில் இடையிடையே துன்பங்கள் வந்து தாக்குதலால் சிறிதளவும் இன்பமில்லை;இதன்கண் இருந்து வாழ்வதில் விருப்பம் கொள்வதற்கில்லை; மேலும், பொருளிழப்பு எய்தும் போதெல்லாம் மனத்தில் ஏக்கமும் வருத்தமும் உண்டாகின்றன; அது குறித்து வெட்கப் படுகிறாயுமில்லை; நாயினும் கீழான தன்மை யுடையையாய் இருக்கின்றாய்; பட்ட வன்துயர்களை நினைத்தால் எனக்கு உடல் பதைக்கின்றது: உள்ளமும் பகீரெனக் கொதிக்கிறது; வேண்டா; என்னோடிசைந்து ஒற்றியூர்ப் பெருமான்பால் அன்பு செய்க. எ.று.

     துட்டத்தனம் - பிறர்க்கும், பிற உயிர்கட்கும் துன்பஞ் செய்யும் தன்மை. வஞ்சகம் - உள்ளும் புறமும் ஒவ்வாமை. இடையறவின்றி இரவும் பகலும் கரையையலைத்து வருத்தும் கடலைபோலக் கணந்தோறும் மனத்தை வருத்துவது பற்றிக் “கடல் சூழ் உலகம்” என்கின்றார். இட்டம் - விருப்பம் . சிறிதளவு உலக வாழ்வில் அமைதியும் இன்பமும் இல்லாமை காணப்படுதலால் உலக வாழ்வில் விருப்பம் நன்றாகாமை குறித்தற்கு, “இறையள வேனும் இன்பமில்லை” எனவும், எனவே “கடல் சூழ் உலகில் இட்டம் என்கொல்” எனவும் உரைக்கின்றார். இறை - சிறிது. இடை - இடத்தின் மேலும் காலத்தின் மேலும் நின்றது. நட்டம் - இழப்பு; பொருட் கேடுமாம். வாழ்வில் நிற்பன சிலவும், நில்லாதன பலவுமாதலின், நட்டம் மிகுதி யென அறிக. நில்லாதன நீங்குமிடத்து வருந்துவது பேதைமை யாதலால் “நாணுகின்றிலை” என்கின்றார். வன்மை - வலிய துயரங்கள், நீக்கற்கு அரியவை போலத் தோன்றிச் சிறிதாயினும் வருத்து மியல்பினால் வன்மை யெனப்பட்டது. பகீலெனல் - திடுக்கிடல்; பதைத்தல் - துடித்தல்; ஒற்றயூர்ப் பெருமான் என்பது அதிகாரத்தான் வந்தது.

     இதனால், வாழ்க்கைத் துன்பங்களை நினைந்து வருந்தல் வேண்டா என வலியுறுத்தியவாறு.

     (8)