அறுச
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய
விருத்தம்
853. பெரியபொருள் எவைக்கும்முதற் பெரும்பொருளாம்
அரும்பொருளைப் பேசற்கொண்ணாத்
துரியநிலை அனுபவத்தைச் சுகமயமாய்
எங்குமுள்ள தொன்மை தன்னை
அரியபரம் பரமான சிதம்பரத்தே
நடம்புரியும் அமுதை அந்தோ
உரியபர கதிஅடைதற் குன்னினையேல்
மனனேநீ உய்கு வாயே.
உரை: மனமே, உலகிற் பெரிய பொருள் எனப்படும் பொருள்கள் எல்லாவற்றினும் முழுமுதற் பெரும்பொருளாகிய அரிய பொருளும், எளிதாக எண்ணிப் பேசி காண முடியாத துரியாவத்தையில் கண்டு அனுபவிக்கும் அனுபவப் பொருளும், இன்ப மயமாய் எங்கும் நிறைந்து பண்டு தொட்டே யிருந்துவரும் பழம்பொருளும், காண்பதற்கரிய மேன்மேலான சிதம்பரத்தின்கண் திருக்கூத்தாடும் அமுதமாகிய ஞானவின்பப் பொருளுமாகிய பரம்பொருளை நீ பெறுதற்குரியதான சிவகதியைப் பெறுதற் பொருட்டு எண்ணினையாயின், நீ தவறாது பெற்று உய்தியடைவாய். எ.று.
உலகிற் பெரிய பொருள் எனப்படுபவை, உலகியல் அளவைகளால் அளந்து துணியப்படுவன. இப்பெரிய பொருள் அனைத்திற்கும் முழுமுதற் காரணப் பொருளை “முதற் பெரும் பொருள்” எனவும், அளவை வகையனைத்தாலும் அளக்கலாகாமைப் பற்றி, “முதற் பெரும் பொருளாம் அரும்பொருள்” எனவும் கூறுகின்றார். துரிய நிலையில், கருவி கரணங்களின் கலப்பின்றி, உயிர் தானும் அப்பரம்பொருளுமாயிருந்து பெறும் நுகர்ச்சியைப் “பேசற் கொண்ணாத் துரியநிலை யனுபவம்” என்கின்றார். அதுவும் இன்பமாய் எங்கும் நிறைந்ததாய்ப் பண்டும் இன்றும் என்றும் உள்ளதாய் விளங்குதலின், “சுக மயமாய் எங்குமுள்ள - தொன்மை” எனவும், அகளமாய் மேன் மேலாய் விளங்கும் இடம் என்பது பற்றி “அரிய பரம்பரமான சிதம்பரம்” எனவும், அதன்கண் கூத்துப் பெருமானாகச் சகளீகரித்துக் காண்பவர்க்கு இன்பம் வழங்குதலின், “சிதம்பரத்தே நடம் புரியும் அமுது” எனவும் சிறப்பிக்கின்றார். பரம் பொருளை ஞானக் கண்ணினிற் கண்டு இன்புற்றார் எய்தும் சிவகதியை “உரிய பரகதி” யென்று குறிக்கின்றார். அதனை யடைவதுதான் மக்கள் உயிர்க்குக் குறிக்கோள் எனவும், அதுபற்றி அப்பரம்பொருளை ஒன்றியிருந்து நினைத்தல் வேண்டும் என்பார், “மனமே உன்னினையேல் உய்குவாயே” எனவும் உரைக்கின்றார்.
இதனால், சிவகதியடைதற்கு உபாயம் கூறியவாறாம். (9)
|