855. மண்முகத்தில் பல்விடய வாதனையால்
மனனேநீ வருந்தி அந்தோ
புண்முகத்தில் சுவைவிரும்பும் எறும்பெனவா
ளாநாளைப் போக்கு கின்றாய்
சண்முகத்தெம் பெருமானை ஐங்கரனை
நடராஜத் தம்பி ரானை
உண்முகத்தில் கருதிஅநு பவமயமாய்
இருக்கிலைநின் உணர்ச்சி என்னே.
உரை: மனமே, மண்ணுலக வாழ்வில் பற்பல புலன் நுகர்ச்சிகளால் நீ வருத்தமெய்தியும், ஐயோ, உடலிற் புண்ணின் சுவையை விரும்பி மொய்க்கும் எறும்பைப் போல வாழ்நாளை வீணே போக்குகின்றாய்; ஆறுமுகப் பெருமானை, ஐந்து கைக் கணபதியை, நடராச மூர்த்தியை உள்ளத்தில் நினைந்து பெறும் அநுபவ வடிவாய் இருக்கின்றாயில்லை; உனது உண்ர்ச்சி யியல்பை என்னென்பது? எ.று.
விடய வாதனை - கண் காது முதலிய பொறி வாயிலாக உண்டாகும் ஆசை, ஐந்தின் நுகர்ச்சி. புண்ணை மொய்க்கும் எறும்புபோல, விடய ஆசைகளால் நாளும் அரிக்கப்பட்டு அவமே நாளைப் போக்குகின்றாய் என அறிவுறுத்துவார், “மனனே நீ வருந்தி யந்தோ புண்முகத்தில் சுவை விரும்பும் எறும்பென வாளா நாளைப் போக்குகின்றாய்” என்றிரங்குகின்றார். சண்முகப்பெருமான், ஐங்கரக் கடவுள், நடராச மூர்த்தி ஆகிய திருமூர்த்தங்களை உள்ளத்தே வைத்து ஒருமுகமாய் உன்னி நோக்கி யநுபவிக்கும் யோக இன்பத்தை நுகர்கின்றாயில்லை யென்பார், “சண்முகத் தெம்பெருமானை, ஐங்கரனை, நடராசத் தம்பிரானை உன் முகத்தில் கருதி அநுபவ மயமாய் இருக்கிலை” என உரைக்கின்றார். மனம் அது செய்யாமைக்கு இரங்குவாராய், “நின் உணர்ச்சி என்னே” என்று நெகிழ்ந்துரைக்கின்றார்.
இதனால், விடய வாதனையை விடுத்து, இறை மூர்த்தங்களின் தியான இன்பத்தில் ஈடுபடுக என அறிவுறுத்தவாறு. (11)
|