856.

     மால்எடுத்துக் கொண்டுகரு மால்ஆகித்
          திரிந்தும்உளம் மாலாய்ப் பின்னும்
     வால்எடுத்துக் கொண்டுநடந் தணிவிடையாய்ச்
          சுமக்கின்றான் மனனே நீஅக்
     கால்எடுத்துக் கொண்டுசுமந் திடவிரும்பு
          கிலைஅந்தோ கருதும் வேதம்
     நால்எடுத்துக் கொண்டுமுடி சுமப்பதையும்
          அறிகிலைநின் நலந்தான் என்னே.

உரை:

     மனமே, திருமால் மாயையைத் தனக்குத் திருமேனியாகக் கொண்டு, நிறம் கருகிக் கரிய மால் எனவாகி, உலகமெலாம் திரிந்து, உள்ளமும் மயக்கமுற்று, வாலை நிமிர்ந்து நடக்கும் அழகிய எருதாகிச் சிவனைச் சுமந்தொழுகின்றானாக, நீ இரு கால்களால் உடம்பைச் சுமந்து கொண்டு அச்சிவன் திருக்கோயிலை வலம் வர விரும்பாயாகின்றாய்; ஐயோ, மறைகள் நான்கும் அச் சிவபரம் பொருளைத் தமது முடிமேல் கொண்டிருப்பதையும் நீ அறியவில்லை; நினது நற்பண்பு இருந்தவாறு என்னே. எ.று.

     மாயையையே தனக்கு உருவாக வுடையவன் திருமால்; அதனால் மாயன் என்று பெயர் பெற்றான் என்னும் புராணச் செய்தியை நினைவிற் கொண்டு “மாலெடுத்துக் கொண்டு கருமாலாகி” என்றும், அவன் பெரிய எருதின் உருக்கொண்டு சிவனைத் தாங்கினான் என்னும் செய்தி பற்றி, “வாலெடுத்து கொண்டு நடந்து அணிவிடையாய்ச் சுமக்கின்றான்” எனவும் இயம்புகின்றார். மகிழ்ச்சி மிகுகின்ற காலத்து வாலெடுத்துச் செல்லல் எருதிற் கியல்பாதலால், “வால் எடுத்துக் கொண்டு நடந்து” என்கின்றார். திருமால் எருதாய்ச் சுமக்க, வேதங்கள் நான்கும் தம் முடி மேல் சுமக்க விளங்கும் சிவபெருமான் திருவடியை, நீ நெஞ்சில் வைத்து நினைந்து மகிழ்கின்றா யில்லையே என்று இரங்குவார், “வேதம் நாலெடுத்துக் கொண்டு முடி சுமப்பதை யறிகிலை” என்றும், “நீ (சிவ பிரான்) காலெடுத்துக் கொண்டு சுமந்திட விரும்புகிலை” என்றும் நெஞ்சின் நிலைமைக்கு இரங்கி, “நின் நலந்தான் என்னே” என்றும் இரக்கமுறுகின்றார்.

     இதனால், சிவபிரான் திருவடியை நெஞ்சு நினையாமைக்கு வருந்தி யிரங்கியவாறாம்.

     (12)