ஆச

ஆசிரியத் துறை

857.

     உலகம் ஏத்திநின் றோங்க ஓங்கிய
          ஒளிகொள் மன்றிடை அளிகொள் மாநடம்
     இலகு சேவடிக்கே அன்பு
          கூர்ந்திலை ஏழை நெஞ்சே
     திலக வாணுத லார்க்கு ழன்றனை
          தீமை யேபுரிந் தாய்வி ரிந்தனை
     கலக மேகனிந்தாய் என்னை
          காண்நின் கடைக்க ருத்தே.

உரை:

     ஏழை நெஞ்சமே, உலகவர் அனைவரும் தன்னைப் பரவியோங்குமாறு, தான் ஓங்கிநின்ற ஒளிபொருந்திய அம்பலத்தின்கண் அருள்கொண்ட பெரிய நடம் புரிந்தொளிரும் சிவந்த திருவடிக்கே அன்பு மிகுகின்றாயில்லை; திலகமிட்ட ஒள்ளிய நெற்றியை யுடைய மகளிரின் இன்பம் கருதி வருந்தித் தீமைகளை மிகவும் பலவாய்ச் செய்து துன்பங்களையே விளைவித்தாய்; நினது முடிவான கருத்துத் தான் என்னையோ, கூறுக. எ.று.

     சிவபரம் பொருளை ஏத்துவதால் உலகம் உயர்ந்தோங்கி நிற்கிறது என்ற கருத்துத் தோன்ற, “உலகம் ஏத்தி நின்றோங்க” எனவும், அவன் ஓங்கினாலன்றி உலகம் ஓங்கி நிற்றற்கின்மையின், தான் மன்றின்கண் மாநடம் புரிவது விளங்க, “ஓங்கிய மன்றிடை மாநடம் செய் சேவடி” எனவும் செப்புகின்றார். மன்றின்கண் பொன்னின் ஒளியும் திருவருள் ஞானத்தின் ஒள்ளொளியும் சேர்ந்து ஒளிர்வதால் “ஓங்கிய ஒளிகொள் மன்று” என்றும், அருட் பெருக்கால் புரிகின்ற திருக்கூத்து என்பதற்கு “அளிகொள் மாநடம்” என்றும் சிறப்பிக்கின்றார். “அன்பு கூர்தல்” ஈண்டு அன்பு செய்தல் மேற்று. செய்வினைப் பயனாதலின், தீயது புரிந்து துன்பம் மிக விளைவித்துக் கொண்டமை தோன்ற, “தீமையே புரிந்தாய் விரிந்தனை” என்றும், துன்பம் உழந்தும் அறிவின்கண் தெளிவு பெறாமைக்கு இரங்குவாராய்க் “கலகமே கனிந்தாய்” எனவும், இச்செயல்களால் உய்தி பெற வேண்டும் என்கிற எண்ணமின்மை புலப்படுதலின் உன்னுடைய முடிவான எண்ணந்தான் யாது என்பாராய், “என்னை காண் நின் கடைக் கருத்தே” எனவும் மொழிகின்றார்.

     இதனால், இறைவன் திருவடிக்கண் அன்பு செய்யாமல், துன்பக் காரணமான செயல்களில் தோய்ந்து துன்பத்திற் கிரையாயினாய் என்று இரங்கியவாறு.

     (13)