859. தேவரே அயனே திருநெடு மாலே
சித்தரே முனிவரே முதலா
யாவரே எனினும் ஐயநின் தன்மை
அறிந்திலர் யான்உனை அறிதல்
தாவில்வான் சுடரைக் கண்ணிலி அறியும்
தன்மையன் றோபெருந் தவத்தோர்
ஓவில்மா தவம்செய் தோங்குசீர் ஒற்றி
யூர்அமர்ந் தருள்செயும் ஒன்றே.
உரை: பெரிய தவமுடைய நல்லோர் இருந்து இடையறாத மாதவம் புரிதலால் ஓங்கிய புகழ்படைத்த ஒற்றியூரில் வீற்றிருந்தருளும் ஒரு பரம்பொருளே, தேவர்களும், அவர்களில் மேம்பட்ட பிரமன் திருமால் ஆகியோர்களும், சித்தர்களும், முனிவர்களும், இவர் முதலாகிய வேறு யாவராயினும் நின் தன்மை முற்றும் அறிந்திலராக, “ஐயனே, யான் உன்னை யறிவ தென்பது வானத்தில் விளங்கும் கெடாத ஞாயிறு முதலாய சுடர்களைக் கண்ணில்லாத ஒருவன் அறிய விரும்பும் தன்மையாகும் அன்றோ? எ.று.
தவமும் முன்னைத் தவமுடையார்க்கே பயன் நல்குவதாமாகலின், ஒற்றியூர்க்கண் பெருந்தவத்தோர் மாதவம் செய்கின்றார்க ளென்பார், “பெருந்தவத்தோர் ஓவில் மாதவம் செய்” கின்றார்களென்றும், அதனால் அவ்வூர் உயர்ந்து விளங்கும் சீர்கொண்டுள தென்பார், “மாதவம் செய்து ஓங்குசீர் ஒற்றியூர்” என்றும் உரைக்கின்றார். முன்னைத் தவம் பெருமை வாய்ந்த தென்றற்குப் “பெருந் தவத்தோர்” எனவும், இப்போது செய்யப்படும தவமும் எவ்வகையாலும் இடையறுந்து கெடாத பெருமை வாய்ந்தது என்று குறிப்பாராய், “ஓவில் மாதவம்” எனவும் சிறப்பித்துள்ளார். செய்தென்னும் வினையெச்சம் காரணப் பொருட்டு. “தவமும் தவமுடையார்க் காகும்” என்பர் திருவள்ளுவர். “நற்றவம் செய்வார்க்கிடம் தவஞ் செய்வார்க்கும் அஃதிடம்” (சீவக. 77) எனத் திருத்தக்க தேவரும் தவத்துக்குரிய வாய்ப்பு இடத்துக்குச் சிறப்பாக வுரைப்பது காண்க. பரம்பொருள் என்பது ஒன்றேயாதலின் சிவபரம்பொருளை “அருள்செயும் ஒன்றே” என்று ஓதுகின்றார். தேவர் - மக்களில் நல்லறம் செய்துயர்ந்தவர். தேவர்கட்கெல்லாம் தேவர்களாதலால், தேவரையடுத்து அயனையும் திருமாலையும் முறை செய்து மொழிகின்றார். சித்தர் என்பவர், அணிமா மகிமா முதலாகச் சொல்லப்படும் எண்வகைச் சித்திகளைச் செய்பவர்; இவர்கள் இரும்பைப் பொன்னாக்கும் இரசவாதம் வல்லவர் என்பர். தவ மிகுதியால் உயர்ந்தவர் முனிவர். இம் முனிவர் மனையாளொடு கூடியிருந்தே தவம் புரிபவர். இவர்கள் அனைவரும் அறிவால் உயர்ந்தவராதலின், இவர்கள் சிவத்தின் பரமாம் தன்மையை யுணர்ந்திருப்பரென எண்ணற்கில்லை; உணர்வாராயின் சிவத்தோடு ஒன்றி யுடனாகியிருப்பர்; உணர்வின்மையால் தேவர் முதலியோராய் வேறுபட்டு அசுரர்களால் அலைக்கப்பட்டுத் துன்புறுகின்றார் என்றெல்லாம் தெளியுமாறு, “தேவரே யயனே திருநெடுமாலே சித்தரே முனிவரே முதலா யாவரே யெனினும் ஐயநின் தன்மை அறிந்திலர்” என்று அறிவிக்கின்றார். தாவில் வான்சுடர் என்பதை ‘வானகத்துத் தாவில் சுடர்’ என இயைக்க. தாவில் சுடர் - அவியாத சுடர். கண்ணுறுப் புடையனாய், காணும் திறலனாயின் மணிமந்திர மருந்துகளால் காணச் செய்யலாம்; கண்ணுறுப்பில்லாத கண்ணிலி எத்துணை முயன்றாலும் வான்சுடரைக் காணும் தன்மை பெறா னென்றகு “வான்சுடரைக் கண்ணிலி யறியும் தன்மை யன்றோ” என்கின்றார்.
இதனால், தேவரும் முனிவரும் சித்தரும் காண்டற்கரிய சிவபரம் பொருளை யான் காண்பதென்பது ஆகாத செயல் என்பதாம். (2)
|