86. வளைத்தே வருத்தும் பெருந் துயரால்
வாடிச் சவலை மகவாகி
இளைத்தேன் தேற்றும் துணை காணேன்
என்செய் துய்கேன் எந்தாயே
விளைத்தே னொழுகும் மலர்த் தருவே
விண்ணே விழிக்கு விருந்தே சீர்
திளைத்தோர் பரவும் திருத்தணிகைத்
தேவே ஞானச் செழுஞ்சுடரே.
உரை: சிறப்புடைய சான்றோர் போற்றும் திருத் தணிகையில் வீற்றிருக்கும் தெய்வமே, ஞானக் செழுஞ்சுடரே, தேன் விளைந்து சொரியும் மலர்களையுடைய கற்பக தருவே, கருணை மழையே, கண் களிக்கப் புதுமைக் காட்சி நல்கும் முருகப் பெருமானே, என் மனத்தைச் சூழ்ந்து கொண்டு வருத்தும் பெருந் துயரால் உள்ளமும் உடம்பும் மெலிவுற்றுச் சவலைக் குழந்தை போல் இளைத்துப் போனேன்; எனக்குத் துணை புரிபவரையும் கண்டிலேன்; எந்தையே யான் யாது செய்து உய்தி பெறுவேன், அருளுக, எ. று.
நன்ஞான நல்லொழுக்கங்களால் சிறப்பு மிக்க சான்றோரைச் “சீர் திளைத்தோர்” என்று கூறுகின்றார். மலர்களின் அகத்தே இனிய தேன் விளைவது பற்றி “விளைத்தேன் ஒழுகும் மலர்” என்று சிறப்பிக்கின்றார். விண், இங்கு மழை மேல் நின்றது; “விண்ணின்று பொய்ப்பின்” (குறள்) என்றாற் போல. காணுந்தோறும் புதிய காட்சி தந்து இன்பம் செய்வது பற்றி, முருகக் கடவுளை “விழிக்கு விருந்தே” என விளம்புகின்றார். துன்பத்தால் துயருறும் போது மனத்தின் திண்மையும் அறிவின் தெளிவும் கலங்கிச் செய்வது தெரியாது திகைப்புறுதலால், “வளைத்தே வருத்தும் பெருந்துயர்” என்றும், துயரத்தால் தோன்றும் உடல் மெலிவைப் புலப்படுத்தற்குச் “சவலை மகவாகி இளைத்தேன்” என்றும் இயம்புகிறார். கைக்குழந்தை பாலுண்டு வளரும் காலத்தே தாய் கருவுறுவளேல், போதிய பாலுணவின்றி மெலியும் குழந்தையைச் சவலைக் குழவி எனவும், சவலை மகவு எனவும் கூறுவர். ஒருவர் படும் துயரத்தைப் பிறர் வாங்கிக் கொள்வ தில்லாமையால், காண்போர் இரக்க முற்றுக் கூறும் ஆறுதல்களால் கலங்கு முள்ளம் தெளிவெய்துதல் இயல்பாதலால், ஆறுதல் செய்வாரைத் “தேற்றும் துணை” என மொழிகின்றார். திருவருட் குறையுற்று வருந்துவார்க்குத் திருவருளல்லது பிறிது யாதும் இல்லாமையால், “என் செய்து உய்கேன்” என்று கூறுகிறார்.
இதன்கண், வளைத்து வருத்தும் துயரத்தால் தெளிவிழந் திருக்கும் எனக்குச் செய்வகை யறிவித்து உய்யக் கொள் என்பது காணலாம். (5)
|