861.

     மணித்தலை நாகம் அனையவெங் கொடியார்
          வஞ்சக விழியினால் மயங்கிப்
     பிணித்தலை கொண்டு வருந்திநின் றுழலும்
          பேதையேற் குன்னருள் உளதோ
     கணித்தலை அறியாப் பேர்ஒளிக் குன்றே
          கண்கள்மூன் றுடையஎன் கண்ணே
     அணித்தலை அடியர்க் கருள்திரு வொற்றி
          அப்பனே செப்பரும் பொருளே.

உரை:

     அளந்தறிய முடியாத பேரொளியை யுடைய குன்று போல்பவனே, கண்கள் மூன்றுடையனாய் என் கண் போன்றவனே, அழகிய தலையின்கண் திருவடியை யுடைய பெருமக்கட்குத் திருவருள் நல்கும் திருவொற்றி யப்பனே, உரைத்தற்கரிய பரம்பொருளே, தலையிலே மணியை யுடைய பாம்புபோன்ற வெவ்விய கொடியிடை மகளிரின் வஞ்சம் பொருந்திய விழியால் அறிவு மயங்கி நோய் தலைக்கொண்டு வருந்தி நின்று துன்புறுகின்ற பேதையாகிய எனக்கு, உனது இன்னருள் எய்துமோ, சொல்லுக. எ.று.

     கணித்தல் - அளவைகளால் அறிதல், எவராலும் அளத்தற்கரிய பரமனாதலின், “கணித்தலை யறியாப் பேரொளிக் குன்று” என்று குறிக்கின்றார். திருக்கோவையாரும், “அளவியை யார்க்கும் அறிவரியோன்” (10) என்று கூறுகிறது. “அளவிடலுற்ற அயனொடுமாலும் அண்டமண்கிண்டியும் காணா, முனையெரியாய மூர்த்தி” (வீழி) என ஞானசம்பந்தர் நவில்கின்றார். ஒளியும் அளத்தற்குரிய பொருளாயினும், சிவப் பேரொளி யன்னதன் றென்றற்குப் “பேரொளிக் குன்று” எனக் கூறுகின்றார். அறியவரு மிடத்து அருளொளி தந்து உண்மை காண உதவுவது பற்றிச் சிவனை “என் கண்ணே” என்று இயம்புகின்றார். சிவன் திருவடியை முடிமேற் கொண்டு பரவும் அடியவரை, “அளித்தலை யடியர்” என்று குறிக்கின்றார். “நாதர் கழல் தம்முடி மேற்கொண்ட கருத்துடன் போந்தர் ஞான முண்டார்” (ஞானசம்.) என்று சேக்கிழார் தெரிவிப்பது காண்க. மன மொழி கடந்து நிற்பதுபற்றிச் சிவனைச் “செப்பரும் பொருள்” எனப் புகழ்கின்றார். மாணிக்கமணியைத் தலையிலே கொண்ட நாகத்தின் விடம் மிகக் கொடிய தென்று உலகோர் உரைத்தலால் “மணித்தலை நாகம்” உவமமாகக் கொள்ளப்படுகிறது. நாகம் போன்ற வெம்மையும், கொடிபோன்ற இடையும் உடைமை தோன்ற “நாகம் அனைய வெங் கொடியார்” என்றும், அவரது கட்பார்வையே வஞ்சம் நிறைந்த தென்றற்கு “வஞ்சக விழியினால்” என்றும், அவருடைய முயக்கம் அறிவை மயக்கி உடலை நோய்க் கிரையாக்குமாறு விளங்க, “மயங்கிப் பிணித்தலைக் கொண்டு வருந்தி நின்றுழலும்” என்றும் அவ்வியல்பறியாது கூடிய தமது பேதைமையை எடுத்து, “பேதையேன்” என்றும், “ஏதங் கொண்டு ஊதியம் போக விடல்” பேதைக்கியல்பாதலின், எனக்கு உன் திருவருளாகிய ஊதியம் எய்துமோ என அஞ்சுகிறேன் என்பார், “பேதையேற்கு உன்னருள் உளதோ” என்றும் விளம்புகின்றார்.

     இதனால், மகளிர் முயக்கத்தால் மயங்கிப் பிணித்தலைக் கொண்டார்க்கு இறைவன் திருவருள் கிடைத்தல் அரிதென்பதாம்.

     (4)