862. ஒப்பிலாய் உனது திருவருள் பெறுவான்
உன்னிநை கின்றனன் மனமோ
வெப்பில்ஆழ்ந் தெனது மொழிவழி அடையா
வேதனைக் கிடங்கொடுத் துழன்ற
இப்பரி சானால் என்செய்வேன் எளியேன்
எவ்வணம் நின்அருள் கிடைக்கும்
துப்புர வொழிந்தோர் உள்ளகத் தோங்கும்
சோதியே ஒற்றியூர்த் துணையே.
உரை: பொறி புலனுகர்ச்சியைத் துறந்த பெரியோருள்ளத்தின்கண் ஓங்கித்தோன்றும் ஞான சோதியே, திருவொற்றியூரில் உறையும் எங்கட்குத் துணைவனே, ஒப்பொருவருமில்லாத உனது திருவருளைப் பெறும் பொருட்டு எண்ணிப் புண்ணாகின்றேன்; மன முதலாகிய அந்தக் கரணத் தொகுதி வேட்கை வெப்பத்திற் புதையுண்டு என் சொல்வழிச்செல்லாமல் துன்பத்துக்கே யிடங்கொடுத்துத் துயர்கின்றன; என் நிலைமை இத்தன்மைத்தாயின் எளியனாகிய யான் என்ன செய்குவேன்; நின்னுடைய திருவருள் எனக்கு எங்ஙனம் கிடைக்கும்? தெரிவித்தருள்க. எ,று.
துப்புரவு - நுகரதற் குரியன. “துறப்பார் மன் துப்புரவில்லார்” (குறள்) என்பர் திருவள்ளுவர். துப்புரவுகள் உளவாகவும் அவற்றைத் துறந்த பெருமக்களைத் “துப்புரவு ஒழிந்தோர்” என்றும் சிறப்பிக்கின்றார். “அகனமர்ந்த வன்பினராய் அருபகை செற்றைம் புலனும் அடக்கி ஞானம் புகலுடையோர் தம்முள்ளப் புண்டரிகத் துள்ளிருக்கும் புராணர்” (வீழி) என ஞானசம்பந்தர் கூறுவது காண்க. ஒள்ளியார் உள்ளத் தோங்கும் சிவனை ஞானசம்பந்தர் முதலிய பெரியோர் “சுடர் விட்டுளன் எங்கள் சோதி” (பாசுரம்) என்றும், “சோதியே சுடரே சூழொளி விளக்கே” (அருட்) என்றும் ஓதுவதால், “உள்ளத் தோங்கும் சோதியே” என வுரைக்கின்றார். “தனக்கு உவமை யில்லாதான்” (குறள்) என்று சான்றோர் கூறுதல் பற்றி, “ஒப்பிலாய்” என்று கூறுகின்றார். வாழும் உயிர்க்கு இறைவன் திருவருளினும் பெறற்குரியது வேறு யாது மின்மையின், அதனைப் பெறல் வேண்டி நாளும் எண்ணியெண்ணிப் புண்ணாகின்ற நிலையை, “உனது திருவருள் பெறுவான் உன்னி நைகின்றனன்” என்றும், மனம் முதலிய உட்கரணங்கள் ஒன்றுபட்டு என் வழி நின்று துணைபுரியாமல் புலனுகர்ச்சி விளைக்கும் வேட்கையால் வெய்துற்று வேதனை செய்கின்றன என்பாராய், “மனமோ வெப்பில் ஆழ்ந்து என் மொழிவழி அடையா வேதனைக் கிடங்கொடுத்துழன்ற” என்றும் இயம்புகின்றார். கருவி கரணங்கள் ஒன்றி நில்லாவாயின் எச்செயலும் கருதிய பயனை விளைவியாவாதலால், “இப் பரிசானால் என்செய்வேன் எளியேன்” என்றும், நின்னுடைய அடி வணங்க வேண்டுவார்க்குப் போல நின்னுடைய அருளைப் பெறற்கும் நீ அருள் வழங்க வேண்டு மென்பாராய், “எவ்வணம் நின்னருள் கிடைக்கும்” என்றும் முறையிடுகின்றார்.
இதனால், இறைவன் திருவருட் பேற்றுக்கும் அவனது திருவருள் வேண்டுமென்னும் முறைமை யுரைத்தவாறாம். (5)
|