863. துணையிலேன் நினது திருவடி அல்லால்
துட்டனேன் எனினும்என் தன்னை
இணையிலாய் உனது தொண்டர்தம் தொண்டன்
எனச்செயல் நின்அருள் இயல்பே
அணையிலா தன்பர் உள்ளகத் தோங்கும்
ஆனந்த வெள்ளமே அரசே
பணையில்வா ளைகள்பாய் ஒற்றியம் பதியில்
பரிந்தமர்ந் தருள்செயும் பரமே.
உரை: அன்புடைய அடியார் உள்ளத்தில் அணை யின்றியே நிறைந்து ஓங்கும் ஆனந்த வெள்ளமாகி யிருப்பவனே, எங்கட்கு அரசனே, நன்செய் வயல்களில் வாளைமீன்கள் பாயும் திருவொற்றியூராகிய தலத்தின்கண் வீற்றிருந்து ஆர்வமுடன் அருள் புரியும் பரம்பொருளே, நின்னுடைய திருவடி யல்லது யான் வேறே துணையில்லாதவன்; யான் துட்டனாயினும், ஒப்பில்லாதவனாகிய நீ என்னை நின் தொண்டர்கட்குத் தொண்டன் எனக் கொள்ளுதல் வேண்டும்; அது திருவருட்கு இயல்பாகும். எ.று.
சிவன்பால் அன்புடைய அடியவர்களின் உள்ளத்தில் ஆனந்த வெள்ளமாய் நிறைந்து மேலும் பெருகியோங்கிய வண்ணமிருப்பதும், அவ்வாறு பெருகிய வழியும் வழிந்தோடாதவாறு அவர்கள் உள்ளத்தே அணையொன்றும் இல்லாதிருந்தும் அவ்வெள்ளம் ஓங்குவதும் கண்டு வியந்து கூறுகின்றாராதலின், “அணையிலா தன்பர் உள்ளகத் தோங்கும் ஆனந்த வெள்ளமே” என்று கூறுகின்றார். செய்வினைக் கேற்ப முறை செய்து அருள் புரிவது பற்றி, “அரசே” எனவுரைக்கின்றார். பணை - மருத வயல். மண்ணகத்து மக்களுயிர்பாற் கொண்ட பரிவால் ஒற்றியூரிற் கோயில் கொண்டிருக்கும் செயல் நலம் விளங்க, “ஒற்றியம்பதியில் பரிந்தமர்ந் தருள்செயும் பரமே” என்று புகல்கின்றார். நில்லா வியல்புடைய வுலகில் நிலைத்த துணையாவன இறைவன் திருவடி யென அறிந்து பற்றிக் கொண்டுள்ளமை புலப்பட, “துணையிலேன் நினது திருவடியல்லால்” என்றும், நின் அடி பரவும் தொண்டரை நோக்க யான் துட்டனாயினும் என்னைப் பொறுத்து நின் தொண்டர்க்குத் தொண்டனாய் ஏற்றுக் கோடல் வேண்டும் என வேண்டுகின்றமையின், “துட்டனேன் எனினும் என்றன்னை உனது தொண்டர்தம் தொண்டன் எனச் செயல்” என்றும், அச்செயல் உன் திருவருட் இயல்பாய் அமைந்தது காண் என்பாராய், “நின் அருள் இயல்பே” என்றும் இயம்புகின்றார். துட்டனென்றும் வடசொற் சிதைவு ஏழாம் நூற்றாண்டிலேயே தமிழிற் புகுந்துலவும் தொன்மை யுடையது. “துட்டனாய் வினைய தென்னும் சுழித்தலை யகப்பட்டேனை” (ஆவடு) என்று நாவரசர் வழங்குகின்றார். தொண்டர்க்குத் தொண்டராய்ச் சிவத்துக்குப் பணி புரிதல் பெரும் புண்ணியம் என்று சான்றோர் அறிவுறுத்தலின், தொண்டர்தம் தொண்டன் எனச் செயல் “என வள்ளலார் வேண்டுகின்றார். உனது தொண்டர் என்பதற்கு, உனது தொண்டினை யுடையவர் எனப் பொருள் கொள்க; அல்லாக்கால் அது வுருபேற்ற உனதென்னும் பெயர் தொண்ட ரென்னும் உயர்திணைப் பெயரோடு இயையா தென்க. “குற்றமுடைய வமணர் திறமது கையகன்றிட் டுற்ற கருமம் செய்துய்யப் போந்தேனுக்கு முண்டு கொலோ, மற்பொலி தோளான் இராவணன் தன் வலி வாட்டுவித்த, பொற்கழலானடித் தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே” என நாவுக்கரசர் விழைந்தோதுவது காண்க.
இதனால், துட்டனாயினும் வேறு துணை யில்லேனாதலால், என்னைத் தொண்டர்தம் தொண்டனாக்குக என்று வேண்டிக் கொண்டவாறாம். (6)
|