864.

     பரிந்துநின் றுலக வாழ்க்கையில் உழலும்
          பரிசொழிந் தென்மலக் கங்குல்
     இரிந்திட நினது திருவருள் புரியா
          திருந்தியேல் என்செய்வேன் எளியேன்
     எரிந்திட எயில்மூன் றழற்றிய நுதற்கண்
          எந்தையே எனக்குறுந் துணையே
     விரிந்தபூம் பொழில்சூழ் ஒற்றியம் பதியில்
          மேவிய வித்தக வாழ்வே.

உரை:

     மதில் மூன்றும் எரிந்து கெடத் தீவைத்த நெற்றிக் கண்ணையுடைய எந்தையே, எனக்கு உற்ற துணையே, விரிந்த பூஞ்சோலைகள் சூழ்ந்த திருவொற்றியூர்க்கண் மேவிய ஞானவாழ்வுடைய பெருமானே, உலகியல் வாழ்வில் ஆவலுடன் இருந்து வருந்தும் தன்மை நீங்கி, அதற்கேதுவாகிய மலவிருள் என்னைவிட்டு நீங்கிட நின்னுடைய திருவருள் ஒளியை நல்காதிருப்பாயாயின் எளியனாகிய யான் யாது செய்வேன்? எ.று.

     இரும்பு, பொன், வெள்ளியாகிய மூன்றால் அசுரர் அமைத்துக் கொண்டு வாழ்ந்த மதில் மூன்றையும் முறுவல் நகையால் எரித்தழித்த வரலாற்றை நினைவிற் கொண்டு கூறலின், “எரிந்திட எயில் மூன்றழற்றிய நுதற்கண் எந்தையே” என்று கூறுகிறார்; எயில் மூன்றழற்றிய எந்தை, நுதற்கண் எந்தை எனத் தனித்தனி இயையும். உறும் துணை - உற்ற துணை; பெரிய துணையுமாம். ஞான மூர்த்தியாகிய சிவன் செயல் அனைத்தும் ஞானமாதலால், “வித்தக வாழ்வே” என்று சிறப்பிக்கின்றார். வித்தகம் - ஞானம். மலத்தாற் பிணிப்புண்டு கண்ணிலாக் குழவிபோற் கேவலத்தில் செயலற்றிருந்த உயிருக்கு மலவிருளின் நீங்குதற் பொருட்டு உலகைப் படைத்து அதன்கண் உடலொடு கூடிய வாழ்வளித்துள்ளானாதலால், அவன் நோக்கத்தை யறியாது உலக வாழ்விலேயே கிடந்துழல்வது நேரிதன்மையின், “பரிந்து நின்று உலக வாழ்க்கையில் உழலும் பரிசொழிந்து” என்றும், அதற்கு மலநீக்கம் இன்றியமையாமையின் “மலக்கங்குல் இரிந்திட” என்றும் இருணீக்கம் ஒளியாலாவது போல் மலவிருணீக்கத்துக்குத் திருவருள் ஒளி வேண்டும் என்பார். “திருவருள் புரியாது இருத்தியேல்” என்றும், திருவருளா லல்லது நீங்கா தென வற்புறுத்தற்கு “என் செய்வேன் எளியேன்” என்றும் எடுத்துரைக்கின்றார். கங்கல் - இருள். இரிதல் - நீங்குதல்.

     இதனால், மலம் காரணமாக உலக வாழ்வு எய்தித் துன்புறுதலின், திருவருள் புரிந்து உய்தி பெறச் செய்க என முறையிட்டவாறாம்.

     (7)