865.

     வாழ்வது நின்றன் அடியரோ டன்றி
          மற்றும்ஓர் வெற்றருள் வாழேன்
     தாழ்வது நினது தாட்கலால் மற்றைத்
          தாட்கெலாம் சரண்எனத் தாழேன்
     சூழ்வது நினது திருத்தளி அல்லால்
          சூழ்கிலேன் தொண்டனேன் தன்னை
     ஆள்வது கருதின் அன்றிஎன் செய்கேன்
          ஐயனே ஒற்றியூர் அரசே.

உரை:

     ஒற்றியூரில் வீற்றிருக்கும் அருளரசே, ஐயனே, நின்னுடைய அடியார்களுடன் வாழ்வதன்றி வேறே ஒரு வெற்றர் குழுவினுள் இருந்து வாழ மாட்டேன்; நின்னுடைய திருவடிக்கல்லது மற்றையோர் அடிகளிலெல்லாம் சரணம் என்று தலை தாழ்த்த மாட்டேன்; நின்னுடைய திருத்தளியை வலம் செய்வதின்றி வேறே யாவரையும் எக்கோயிலையும் வலம் செய்யேன்; தொண்டனாகிய என்னை நீ ஆட்கொள்ளக் கருதினாலன்றி யான் யாது செய்யக்கடவேன்? எ.று.

     அடிய ரல்லாதாரோடு வாழ்வதாயின் அவர் உணர்த்தும் அஞ்ஞானத்தால் உறுதி யிழத்தல் வேண்டுமாதலின், “வாழ்வது நின்றன் அடியரோடன்றி மற்றும் ஓர் வெற்றருள் வாழேன்” என்று கூறுகின்றார். வெற்றர் - சிவன் திருவடி சிந்திக்கும் சிவஞானமில்லாதார். வெற்றர் உள் - வெற்றர்களின் சூழல். மற்றைச் சிறு தேவர்களின் தாள்களை, “மற்றைத்தாள்” எனக் குறிக்கின்றார். சூழ்வது - வலமாகச் சுற்றுவது. திருத்தளி - திருக்கோயில். தொண்டனாதலின் உன்னை வற்புறுத்த முடியாது என்பார், “என் செய்கேன்” என முறையிடுகின்றார்.

     இதனால், தொண்டனாகிய என்னை நீ ஆளுதற்குத் திருவுளம் கொண்டாலன்றி யான் வேறு யாதும் செய்ததற்கில்லை எனத் தெரிவித்துக் கொண்டவாறாம்.

     (8)