866. ஐயனே மாலும் அயனும்நின் றறியா
அப்பனே ஒற்றியூர் அரசே
மெய்யனே நினது திருவருள் விழைந்தேன்
விழைவினை முடிப்பையோ அன்றிப்
பொய்யனேன் தன்மைக் கடாதது கருதிப்
பொன்அருள் செயாதிருப் பாயோ
கையனேன் ஒன்றும் அறிந்திலேன் என்னைக்
காத்தருள் செய்வதுன் கடனே.
உரை: ஐயனே, திருமாலும் பிரமனும் நேர் நின்றும் அறிய முடியாத ஒற்றியூர் அப்பனே, அரசே, மெய்ம்மையே யுருவானவனே, நின்னுடைய திருவருளையே விரும்புகின்றேன்; என் விருப்பத்தை முடித்து வைப்பாயோ, அல்லது, பொய்யை யுடையனாகிய என் தன்மைக்குப் பொன் போன்ற அருளை வழங்குதல் கூடாது என்று எண்ணி மறுத்திருப்பாயோ; கீழ்மையுடைய யான் ஒன்றும் அறியேன்; என்னைக் காத்தருள்வது உன் கடனாகும். எ.று.
ஐயன் - தலைவன், முன்பு பன்றியும் அன்னமுமாய் மாறி முயன்றி காணாராயினமையின் பின்பு நேர் நின்று காணலுற்றும் அறியாமையின், “மாலும் அயனும் நின்றறியா அப்பனே” எனவுரைக்கின்றார். நின்றும் என்று வரற்குரிய எச்சவும்மை விகாரத்தால் தொக்கது. என்றும் உள்ள பரம்பொருளாதலின் “மெய்யன்” என்றும், அந்தமில் இன்பத்து அழிவில் பெரு வாழ்வு தருவதாகலின் இறைவன் அருளைத் “திருவருள்” என்றும் சிறப்பிக்கின்றார். திருவருள் ஞானமாய்த் தோன்றுவதுபற்றி “விழைந்தேன்” என்று வேண்டுகின்றார். பக்குவம் இல்லார்க் கருளின் திருவருள் குழவி கையிற்பட்ட பொற்கிண்ண மாமெனக் கொண்டு மறுக்கலாம் என அஞ்சுகின்றமை புலப்பட, “விழைவினை முடிப்பையோ அன்றிப் பொய்யனேன் தன்மைக்கு அடாதது கருதிப் பொன்னருள் செயாது இருப்பாயோ” என்று புகல்கின்றார். நிலையா வாழ்வுடையேன் என்பார், “பொய்யனேன்” என்றும், அவ் வாழ்வுக்கொப்ப நினைவும் செயலும் பொய்யாம் தன்மையுடைமையால், மெய்ம்மை நலம் நல்கும் திருவருட்கு யான் தகுதியுடையனாகேன் என்று கண்டு மறுப்பாயோ என்பாராய், “தன்மைக்கு அடாதது என்று கருதி அருள் செயா திருப்பாயோ” என்றும் இயம்புகின்றார். வீடு பயக்கும் திருவடியைப் பொன்னடி என்றாற்போல், வீடுபேற்றுக்குரிய ஞானமருளும் திருவருளைப் “பொன்னருள்” என்று சிறப்பிக்கின்றார், “பொற்றவிசு நாய்க்கிடு மாறன்றே நின் பொன்னருளே” (திருவேசறவு-5) என்பது திருவாசகம். கையன் - சிறியன். ஒன்றும் - சிறிதும். நின் திருவுள்ளக் குறிப்பை அறியாமையால் எளியனாகிய என்னைக் காத்துக்கொள்ளும் திறம் இல்லாமையால், காத்தலும் அருளலும் நினைக்கே கடனாம் என்பார், “ஒன்றும் அறிந்திலேன், என்னை காத்தருள் செய்வதுன் கடன்” என்று கட்டுரைக்கின்றார்.
இதனால், திருவருட் பேற்று விழைவு கூறி, அதற்குரிய திருவுள்ளக் குறிப்பு அறியாமை சொல்லிக் காத்தருள வேண்டியவாறாம். (9)
|