867.

     செய்வதுன் கடன்காண் சிவபெரு மானே
          திருவொற்றி யூர்வருந் தேனே
     உய்வதென் கடன்காண் அன்றிஒன் றில்லை
          உலகெலாம் உடையநா யகனே
     நைவதென் நெஞ்சம் என்செய்கேன் நினது
          நல்அருள் பெறாவிடில் என்னை
     வைவதுன் அடியர் அன்றிஇவ் வுலக
          வாழ்க்கையில் வரும்பொலா அணங்கே.

உரை:

     திருவொற்றியூர்க்கண் எழுந்தருளும் தேனே, சிவ பெருமானே! எனக்கு அருள் புரிவது உன் கடன்; அடியேனுக்கும் உனது நல்லருள் பெற்று உய்வது கடனாகும்; நிலைமை இதுவன்றி ஒன்றும் இல்லை; நீ உலகெல்லாம் உடைமையாகக் கொண்ட நாயகன்; உன் அருளே நினைந்து என் நெஞ்சம் மெலிந்து வருந்துகிறது; யான் என்ன செய்ய வல்லேன்? நினது நல்ல அருளைப் பெறேனாயின் என்னை உன் அடியார் வைவர்: அதுவேயுமன்றி நீ யளித்துள்ள இவ்வுலக வாழ்க்கையில் பொல்லாத துன்பங்கள் உண்டாகும், காண்க. எ.று.

     தேன் போல் நினைக்குந் தோறும் இனிப்பது பற்றி, “தேனே” என்று சிறப்பிக்கின்றார். “தேனொத் தினியான்” (மயிலாடு) எனவும், “நினைவார் நினைய வினியான்” (புறவம்) எனவும் ஞானசம்பந்தர் உரைப்பது காண்க. உடல் கருவி கரணங்களை நல்கி உலகில் வாழ்வித்தவனாதலால் வாழ்வார்க்கு அருள் செய்வது கடமையாதல் பற்றிச் “செய்வதுன் கடன் காண் சிவபெருமானே” என்றும், வாழ்வளித்து வாழ வைத்த முதல்வனது திருவருளைப் பெற்று வாழ்வாங்கு வாழ்ந்து உறுதி யெய்துவது எனக்குக் கடன் என்பார், “உய்வது என் கடன் காண்” என்றும், எனவே, நீ அருள் செய்வதும், அது பெற்று யான் உய்தி பெறுவதும் கடனாற்றும் செயலாவதன்றி வேறில்லை என்பாராய். “அன்றி ஒன்றில்லை” என்றும் உரைக்கின்றார். உலகெலா முடைய தலைவனாதலால் உன்பால் இதனை முறையிடுகின்றேன் என்றற்கு “உலகெலா முடைய நாயகனே” என்று குறிக்கின்றார். உலக வாழ்க்கைக்கு நேரிய வழியும் ஒளியும் நல்குவது திருவருளாதலால் அது பெறல் வேண்டி என் நெஞ்சம் முயன்று மெலிவுற்று வருந்துகிறது என்பார். “நைவதென் நெஞ்சம்” என்றும், அதனைத் தெரிவிக்கும் பொருள் வேறு இல்லையாதலால் செயலற் றொழிந்தேன் என்பாராய், “என் செய்கேன்” என்றும் இயம்புகின்றார். அருள் வள்ளலாகிய நின்பால் அதனைப் பெறேனாயின், முறைப்படி கேளாது இழுக்கினேன் என்று நினக்கு அடியராயினார் என்னை இகழ்வர் என்பார், “நினது நல்லருள் பெறாவிடில் என்னை வைவதுன் அடியர்” என்றும், வாழ்வளிக்கப்பெற்ற நான் வாழ்வாங்கு வாழும் வகையின்றித் தவறு செய்து துன்பமே விளைவிக்க வேண்டியவனாவேன் என்பாராய், “இவ்வுலக வாழ்க்கையில் வரும் பொலா அணங்கே” என்றும் விளம்புகின்றார்.

     இதனால், திருவருளை வேண்டிப் பெறாவிடில் பெறுமுறை யறியாமை பற்றி அடியார் வைவதும், வாழ்வாங்கு வாழும் வகை யறியாமைபற்றி உலக வாழ்க்கைக்குப் பழியும் உண்டாம் என்றவாறாம்.

     (10)