869. தாவியே இயமன் தமர்வரும் அந்நாள்
சம்புநின் திருவருள் அடையாப்
பாவியேன் செய்வ தென்என நெஞ்சம்
பதைபதைத் துருகுகின் றனன்காண்
கூவியே எனக்குன் அருள்தரின் அல்லால்
கொடியனேன் உய்வகை அறியேன்
வாவிஏர் பெறப்பூஞ் சோலைசூழ்ந் தோங்கி
வளம்பெறும் ஒற்றியூர் வாழ்வே.
உரை: நீர்நிலைகள் அழகுறப் பூஞ்சோலைகள் சூழ்ந்து வானளாவ ஓங்கி வளம்பெற்று விளங்கும் ஒற்றியூர்க்கண் இருந்து வாழ்வளிக்கும் பரம்பொருளே, சம்புவே, எமன் தூதுவர்கள் என் உயிர் கோடற்குத் தாவி வரும் அக்காலத்தே நின் திருவருளைத் துணையாகப் பெறாத பாவியாகிய யான் என் செய்வதென்று நெஞ்சம் பதைபதைத்து அச்சத்தால் உருகுகின்றேன்; என்னைக் கூவியழைத்து நினது அருளைத் தருகுவையாயின் யான் உய்வேன்; அன்றேல் கொடியனாகிய யான் உய்வகை யொன்றும் அறியேனாகின்றேன், காண். எ.று.
கடற்கரைக் கண்ணதாகலின் திருவொற்றியூர் வற்றாத நீர் நிலைகளும் வானளாவிய சோலைகளும் கொண்டிருப்பது கண்டு “வாவியேர் பெறப் பூஞ்சோலைகள் சூழ்ந்து ஓங்கி வளம் பெறும் ஒற்றியூர்” என்று உரைக்கின்றார். வாவிக் கரையில் நிற்கும் சோலைகள் பூத்து ஒன்றற்கொன்று அழகு செய்வதுபற்றி “வாவியேர் பெறப் பூஞ்சோலை ஓங்கி” யுள்ளன என இயம்புகின்றார். நாளுலந்தாரை நமன் தமர் தவிராது பற்றிச் செல்வரென்பதனால், “இயமன் தமர்வரும் அந்நாள்” என்று விதந்து கூறுகிறார். வாழ்நாள் முடிந்தார் எத்தகைய அரண் சேர்ந்திருப்பினும், நமன் தூதுவர் அவ்வரண்களைக் கடந்து போந்து பற்றிக் கொள்வது தோன்ற, “நமன்தமர் தாவிவரும் அந்நாள்” என்று குறிக்கின்றார். திருவருளாகிய அரணுடையார்க்கன்றி நமன் தமர் கைப்படாது உய்வகை யின்மையின், “நின் திருவருளடையாப் பாவியேன் செய்வதென்னென நெஞ்சம் பதைத்து உருகுகின்றனன் காண்” எனப் புலம்புகின்றார். திருவருளையடையாமைக்கேது பாவமுடைமை யென்பது விளங்கப் “பாவியேன்” என்றும், உயிர்க்கு இறுதி நேர்வதை நினையுங்கால் நடுங்கிப் பதைப்பது நெஞ்சமாகலின், “செய்வது என்னென நெஞ்சம் பதைபதைத் துருகுகின்றனன் காண்” என்றும் உரைக்கின்றார். நெஞ்சு உருகுகின்றனன் என்றவிடத்து நெஞ்சின் வினை முதலொடு முடிந்தது. பாவியாய் அடியார் சூழலின் நீங்கி நிற்கின்றேனாதலால், அன்புடன் கூப்பிட்டு அருளுதல் வேண்டும் என்றற்குக் “கூவியே” எனக்குன் அருள் தரினல்லால்” என்றும், அருள் பெறின், கொடுமைத் தன்மை நீங்கி உய்யும் நெறி யுணர்ந்து கொள்வேன் என்று பொருள்பட. “அருள் தரினல்லால் கொடியனேன் உய்வகை யறியேன்” என்றும் கூறுகின்றார்.
இதனால், நமன் தூதுவர் வருநாள் நினைந்து நெஞ்சு வருந்து மெனக்கு அருளொளி தந்து உய்வகை யருள்க என்று வேண்டிக் கொண்டவாறாம். (2)
|