87.

    அடுத்தே வருத்தும் துயர்க் கடலில்
        அறியா தந்தோ விழுந்திட்டேன்
    எடுத்தே விடுவார் தமைக் காணேன்
        எந்தா யெளியேன் என்செய்கேன்
    கடுத்தேர் கண்டத் தெம்மான்றன்
        கண்ணே தருமக் கடலே என்
    செடித்தீர் தணிகை மலைப் பொருளே
        தேனே ஞானச் செழுஞ்சுடரே.

உரை:

     குற்றமில்லாத தணிகை மலையில் எழுந்தருளும் பரம் பொருளே, தேனே, ஞானச் செழுஞ்சுடரே, விடம் பொருந்திய கழுத்தையுடைய தலைவனாகிய சிவனுடைய கண்ணே, அடுத்தடுத்து வந்து என்னை வருத்துகிற துயரமாகிய கடலில் அறிவறியாமையால் வீழ்ந்து விட்டேனாக, அதனினின்றும் எடுத்துக் கரை யேற்றுவோர் ஒருவரையும் நான் காண்கின்றேனில்லை; எந்தையே, எளியனாகிய யான் என்ன செய்து உய்தி பெறுவேன், எ. று.

     செடி - குற்றம், துன்பம், செடித்தீர் என வலித்தது எதுகை நயம். மலைமேல் இருந்து தொழுவார்க்கு வேண்டும் வரம் பலவும் தருதலாற் “பொருளே” என்று கூறுகிறார். கடு - விடம். சிவபிரான் நெற்றித் திருக்கண்ணில் தோன்றிய சிறப்புப் புலப்படக் “கடுத்தேர் கண்டத்து எம்மான் தன் கண்ணே” என்று சிறப்பிக்கின்றார். “அறவாழி யந்தணன்” (குறள்) எனச் சான்றோர் கூறுவது கொண்டு, “தருமக்கடலே” என்று கூறுகிறார். அடுத்தடுத்துப் போந்து வருத்துவது துன்பத்துக்கியல்பாதலால், “அடுத்தே வருத்தும் துயர்க் கடல்“ என்றும், பெருகித் தோன்றுதலால் துயரத்தைத் “துயர்க்கடல்” என்றும் குறிக்கின்றார். துயரைக் கடல் என்றலின், அதனால் துன்புறும் திறத்தைத் “துயர்க் கடலில் விழுந்திட்டேன்” என்றும், துயர் துடைத்து ஆதரவு செய்பவரை, “எடுத்து விடுவார்” என்றும் இயம்புகின்றார். உய்தி பெறுதற் கேற்ற வழிவகை காண வியலாமை தோன்ற, “எளியேன் என்செய்கேன்” என்று கூறுகிறார்.

     இதனால் அடுத்தடுத்து வரும் துன்பம் போக்குதற்குரிய வழி யருள் செய்க என வேண்டிக் கொண்டவாறாம்.

     (6)