870. நீரின்மேல் எழுதும் எழுத்தினும் விரைந்து
நிலைபடா உடம்பினை ஓம்பிப்
பாரின்மேல் அலையும் பாவியேன் தனக்குப்
பரிந்தருள் பாலியாய் என்னில்
காரின்மேல் வரல்போல் கடாமிசை வரும்அக்
காலன்வந் திடில்எது செய்வேன்
வாரின்மேல் வளரும் திருமுலை மலையாள்
மணாளனே ஒற்றியூர் வாழ்வே.
உரை: கச்சின் மேல் மிக்கு வளரும் திருமுலைகளையுடைய உமையவள் கணவனாயத் திருவொற்றியூர்க்கண் எழுந்தருள்பவனுமாகிய பெருமானே, நீர்மேல் எழுதும் எழுத்தினும் விரைந்து மறையும் உடம்பினைப் பாதுகாத்து நிலத்தின்மேல் திரியும் பாவியாகிய என்பால் அன்புகூர்ந்து அருள் புரியாயாயின் கருமுகிலின் மேல் இவர்ந்து வருவது போல் எருமைக் கடாவின்மேல் வரும் அந்த நமன் என் உயிர் கவர்தற்கு வருவானாயின் யான் யாது செய்ய வல்லேன்? எ.று.
யாக்கை நிலையாமை காட்டற்கு நீர்மேல் எழுதும் எழுத்தை யுவமம் கூறுவது சான்றோர் மரபாதலின், “நீரின்மேல் எழுதும் எழுத்தினும் நிலைப்படா உடம்பினை” என்று கூறுகின்றார். குமரகுருபரரும் “நீரில் எழுத்தாகும் யாக்கை” (நீதி. வி.) என்றும் கூறுகின்றார். நீர்மேல் எழுதும் எழுத்து எழுதும்போதே மறையுமாதலால், அதனினும் விரைந்து கெடும் நமது உடம்பென்றற்கு “நீரின்மேல் எழுதும் எழுத்தினும் விரைந்து நிலைபடாது” என்று கூறுகின்றார். நிலையா வுடம்பை நம்பி நெடிது வாழ நினைந்து பொன்னும் பொருளும் போகமும் புகழும் நாடித் திரிவது பற்றி, “பாரின் மேல் அலையும் பாவியேன்” என்றும், அது பாவமாய் அமைவது எண்ணிப் “பாவியேன்” என்றும் பகர்கின்றார். பாவமுடையார்க்கு அருள் செய்தல் முறையாகாமை நினைந்து, “பரிந்தருள் பாலியாய்” எனவும், அருளல் முறையன்றெனப் படுமாயின், நமன் வந்து பற்றும்போது யாது செய்வேனென வருந்துதல் தோன்ற, “என்னில்” எனவும், “காரின்மேல் வரல் போற் கடாமிசை வரும் அக்காலன் வந்திடில் எது செய்வேன்” எனவும் இசைக்கின்றார். கரிய எருமைக் கடா இயமனுக்கு ஊர்தி யெனப் புராணிகர் கூறுதலால் “காரின்மேல் வரும் அக்காலன்” என்றும், இயமன் குறித்த வுயிரைக் கொள்ளாமல் திரும்பிச் செல்வதின்மை பற்றி “ஏது செய்வேன்” என்றும் கூறுகின்றார்.
இதனால், திருவருள் பெறாவிடில் உயிர் கொள்வான் வரும் நமன் கைப்படா துய்தற்கு வழியில்லை என்பதாம். (3)
|