871.

     கருங்கணம் சூழக் கசியும்இவ் வுடலம்
          கருதும்இக் கணமிருந் ததுதான்
     வருங்கணம் ஏதாய் முடியுமோ ஐயோ
          வஞ்சனேன் என்செய வல்லேன்
     பெருங்கணம் சூழ வடவனத் தாடும்
          பித்தனே உத்தம தவத்தோர்
     மருங்கண வுறநின் றரகர எனுஞ்சொல்
          வான்புகும் ஒற்றியூர் வாழ்வே.

உரை:

     பெரிய பூதகணமும் பேய்க்கூட்டமும் சூழ்ந்து நின்றாடத் திருவாலங்காட்டில் ஆடுகின்ற பித்தனே! உத்தமமான தவம் புரியும் மேன்மக்கள் பக்கத்தே நெருங்கி நின்று அரகர என எழுப்பும் முழக்கம் வானுற வோங்கும் திருவொற்றியூர்க்கு வாழ்வாய பெருமானே! சுற்றமாகிய வலிய கூட்டம் புடைசூழவும் நோய் மிக்கு மெலியும் இவ்வுடம்பு இக்கணத்தே இனிதிருந்தது வருங் கணத்தில் என்னாய்ப் போகுமோ? ஐயோ, வஞ்ச வுள்ளத்தனாகிய யான் யாது செய்யக்கூடும்? எ.று.

     கருங்கணம் - மக்கட் சுற்றமாகிய வலிய கூட்டம். கருமை - கருங்கை என்ற விடத்திற் போல வலிமை மேற்று. நிலையுடையதாகக் கருதி மதிக்கும் இப்பொழுது என்பது தோன்ற “கருதும் இக்கணம்” எனவுரைக்கின்றார். நிலைபேறின்றி இறந்துபடும் என்பது விளங்க “வருங்கணம் ஏதாய் முடியுமோ” என விளம்புகின்றார். நிலையாததை நிலையுடையதாக நினைந்து எண்ணாதன வெண்ணி யிருந்தமை நினைக்கப்படுதலின் “ஐயோ” என்றும், கணப்பொழுதும் நிலைபேறில்லாத வுடம்பைக் கொண்டு வஞ்சமும் சூதும் வகைபடச் சூழ்ந்து வாழ்வதற்கு வருந்துமாறு புலப்பட “வஞ்சனேன் என்செய வல்லேன்” என்றும் இயம்புகின்றார். வடவனம் - ஆலங்காடு. கூளிக்கணமும் பேய்க்கணமும் குறுநரியும் கூகையும் பருந்தும் ஆந்தையுமாகிய நிறைந்த பெருங்கணம் இங்கே குறிக்கப்படுகின்றது. திருவருள் ஞானப்பேறு குறித்த தவ மென்றற்கு “உத்தமத் தவத்தோர்” என்றும், திருக்கோயிலில் இறைவன் பக்கத்தே நெருங்கி நின்று “அரகர” எனப் பன்முறையும் சொல்லி முடிக்குமாறு விளங்க, “மருங்கு அணவுற நின்று அரகர எனும் சொல் வான்புகும்” என்றும் உரைக்கின்றார்.

     இதனால், யாக்கை நிலையாமை கூறிச் சூதும் வஞ்சனையும் கொண்டு வாழ்ந்தமை நினைந்து வருந்தும் திறம் கூறியவாறாம்.

     (4)