872. கன்னியர் அளகக் காட்டிடை உழன்ற
கல்மனக் குரங்கினேன் தனைநீ
அன்னியன் என்றே கழித்திடில் உனக்கிங்
கார்சொல வல்லவர் ஐயா
என்னியல் அறியேன் நமன்தமர் வருநாள்
என்செய்வேன் என்செய்வேன் அந்தோ
மன்னிய வன்னி மலர்ச்சடை மருந்தே
வளங்கொளும் ஒற்றியூர் வாழ்வே.
உரை: நிலைத்த வன்னியும் கொன்றை மலரும் சூடிய சடையையுடைய மருந்து போல்பவனே, வளம் கொண்ட ஒற்றியூர்க்கு வாழ்வளிக்கும் முதல்வனே, இளமகளிர் கூந்தலாகிய காட்டின்கண் திரியும் கற்போன்ற மனமாகிய குரங்கையுடையனாகிய என்னை வேற்றவன் என்று ஒதுக்கி விடுவாயாயின் இவ்வுலகில் உனக்கு என் இயல்பினைச் சொல்ல வல்லவர் யாவர்? ஒருவரும் இலர்; ஐயனே, என் இயல்பையும் யான் அறியேன்; யமதூதர்கள் என்னுயிரைக் கொள்ள வரும் போதில் அந்தோ என்ன செய்குவேன்? என்ன செய்குவேன்? எ.று.
வன்னியும் கொன்றையும் பிறவுமாகிய மலர்கள் நிலைபெற விளங்கும் சடை முடியாதலால் “மன்னிய வன்னி மலர்ச்சடை” என்றும், பிறவிப் பிணிக்கு அப்பெருமானே மருந்தாதல் விளங்க “மருந்தே” என்றும் கூறுகின்றார். இளமகளிர் கூந்தற்குப் பூச்சூடலிலும், அணையாகக் கொள்வதிலும் மனநினைவுகள் பெருகி அலைந்தமை தோன்றக் “கன்னியர் அளகக் காட்டிடை யுழன்ற கல்மனக் குரங்கினேன்” என்று உரைக்கின்றார். கூந்தலை யணையாகக் கோடலை, “மகளிர் விரிமென் கூந்தல் மெல்லணை வதிந்து” (பதிற். 50) என்பதனாலறிக. இரக்கமின்மைக்குக் கல்லும், அலைதற்குக் காட்டிடைத் திரியும் குரங்கும் மனத்துக்குவமமாயின. குரங்கு போன்ற மனமுடையனாயினும், நின்பால் அன்புடையனேயன்றி வேற்றவனல்லன்; வேறாக எண்ணி விலக்குதல் வேண்டா என வேண்டலுற்று, “அன்னியன் என்று கழித்திடில் உனக்கு இங்கு ஆர் சொல வல்லவர் ஐயா” என மொழிகின்றார். அன்னிய னென விலக்கினால், விலக்குதல் கூடாதென மறுத்து யான் நின்பால் அன்புடையன் என்று எடுத்துச் சொல்ல வல்லவர் இவ்வுலகில் யாருமில்லை என்பாராய், “உனக்கு இங்கு ஆர் சொல வல்லவர் ஐயா” என்று முறையிடுகின்றார். எனது இயல்பை என்சொற் செயல்களைக் காட்டாகக் கொண்டு காணவல்லவர் பிறரே; அதுவன்றி யானே அறிவதென்பது முடியாத தொன்றென்பார் “என்னியல் அறியேன்’ என்று சொல்லி, இந்நிலையில் யமதூதர் உயிர் கொள்வான் என்பால் வரும் போது யான் ஒன்றும் செய்ய மாட்டாது துன்புறுவேன் என்பாராய், “நமன் தமர் வரும் நாள் என் செய்வேன் என் செய்வேன் அந்தோ” என்று வருந்துகின்றார்.
இதனால், என்னை அன்னியனெனக் கருதி விலக்காது அருளல் வேண்டும்; விலக்கினால் நமன் தமர் வரும்போது யாதும் செய்ய வல்லனல்லேனாவன் என்று கூறியவாறாம். (5)
|