873.

     பசிக்குண வுழன்றுன் பாததா மரையைப்
          பாடுதல் ஒழிந்துநீர்ப் பொறிபோல்
     நசிக்கும்இவ் வுடலை நம்பினேன் என்னை
          நமன்தமர் வருத்தில்என் செய்கேன்
     விசிக்கும்நல் அரவக் கச்சினோய் நினது
          மெய்அருள் அலதொன்றும் விரும்பேன்
     வசிக்கும்நல் தவத்தோர்க் கருள்செய ஓங்கி
          வளம்பெறும் ஒற்றியூர் வாழ்வே.

உரை:

     எல்லைக்குள் வாழும் நல்ல தவத்தோர்க்கு அருள் செய்யும் பொருட்டு மேன்மையுற்று வளம் மிகும் திருவொற்றியூர்க்கு வாழ்வளிக்கும் பெருமானே, பசிக்கு உணவு நாடித் திரிந்தமையால் உன்னுடைய திருவடித் தாமரைகளைப் பாடுவதை விடுத்து, நீரின் மேலிட்ட கோலம் போன்று கெட்டு மறையும் இவ்வுடலை நிலையாயதென்று விரும்பி வாழ்ந்தேன். பாம்பைக் கச்சுக்குரிய கயிறாகக் கொண்டு தோலாடையைப் பிணித்துக் கொள்ளும் பெருமானே, நிலைத்த நினது அருட்செல்வத்தை யன்றி வேறு எதனையும் விரும்புவதில்லாத யான், நாளை, கால தூதர்கள் போந்து என்னைப் பற்றிச் சென்று வருத்துவார்களாயின் என் செய்வேன்? எ.று.

     ஒற்றியூர் எல்லைக்குள் வாழும் நற்றவத்தோரை “வசிக்கும் நற்றவத்தோர்” எனவும், அவர்கட்கு வேண்டுவன அருள் செயும்பொருட்டு ஒற்றியூரிற் சிவன் கோயில் கொண்டிருப்பதே யன்றி, வாழ்வார் வாழ்வுக்கு வளம் உண்டாக வேண்டியும் இருத்தல் விளங்க, “தவத்தோர்க்கு அருள் செயலோங்கி வளம்பெறும் ஒற்றியூர் வாழ்வே” என்றும் எடுத்துரைக்கின்றார். பாம்பைக் கச்சாக அணிதலால், “விசிக்கும் நல் அரவக் கச்சினோய்” என்றும், அவன் நல்கும் அருட் செல்வமல்லது நிலைத்த செல்வம் வேறின்மையின், “மெய்யருள்” என்றும், அதனையே வள்ளற் பெருமான் பெரிதும் விரும்புதலால் “மெய்யருள் அலதொன்றும் விரும்பேன்” என்றும் இயம்புகின்றார். விசித்தல் - கட்டுதல். இறைவன் திருவடிகளைப் பாடா தொழிந்த குற்றத்துக்குக் காரணம் இது வென்பார், “பசிக்குணவு உழன்று பாத தாமரையைப் பாடுதல் ஒழிந்தேன்” என்றும், உணவு நாடி யுழன்றதும் உடலைக் காதலித் தொழுகிய செய்கையா லென்றற்கு “இவ்வுடலை நம்பினேன்” என்றும் கூறுகின்றார். உடலின் நிலையாமையை இப்போது அறிந்து கொண்டமையின் “நீர்ப்பொறி போல் நசிக்கும் இவ்வுடல்” என்கின்றார். நீர்ப்பொறி - நீர்மேல் எழுதும் கோலம்; புள்ளியும் கோடுமாய் அமைதலால் நீர்க்கோலம் நீர்ப்பொறி யெனப்பட்டது. “நீர்க்கோல வாழ்வு” என்பர் கம்பர் (கும்ப.). விலக்கரிய செயலினராதலால், “நமன் தமர் வருத்தில் என் செய்கேன்” என்று அவலிக்கின்றார்.

     இதனால், உடலை நம்பிப் பாடற்குரிய பரமனைப் பாடா தொழிந்த குற்றத்துக்கு நமன்தமர் வருத்தலுற்றால் விலக்குதற் கில்லை யென விளம்பியவாறாம்.

     (6)