874.

     கான்றசோ றருந்தும் சுணங்கனின் பலநாள்
          கண்டபுன் சுகத்தையே விரும்பும்
     நான்றநெஞ் சகனேன் நமன்தமர் வருநாள்
          நாணுவ தன்றிஎன் செய்கேன்
     சான்றவர் மதிக்கும் நின்திரு வருள்தான்
          சார்ந்திடில் தருக்குவன் ஐயா
     மான்தனிக் கரத்தெம் வள்ளலே என்னை
          வாழ்விக்கும் ஒற்றியூர் வாழ்வே.

உரை:

     மானேந்தும் ஒப்பற்ற கையையுடைய வள்ளலே, என்னை வாழ்விக்கும் ஒற்றியூர் வாழ்முதலாகிய சிவனே, உண்டு கக்கிய சோற்றை யுண்ணும் நாயைப்போல் பன்னாளும் பெற்ற புல்லிய நலத்தையே விரும்பும் நெஞ்சினையுடைய யான் இயமன் தூதுவர் வரும் போது என் செய்கைகளை நினைந்து நாணுவதன்றி வேறு யாது செய்ய வல்லேன்? சான்றோர் செல்வமாக மதிக்கும் நினது திருவருளை யடைவேனாயின், ஐயனே, யான் பெருமிதம் உறுவேன். எ.று.

     யாகத்தில் தோன்றிய மானாதலின் அதனைத் தன் கைகளில் ஒன்றில் ஏந்துவதுபற்றி “மான் தனிக்கரத்து எம் வள்ளலே” என்று இசைககின்றார். உடல் கருவி போகங்களைத் தந்து உலகில் வாழச் செய்தலின், “என்னை வாழ்விக்கும் ஒற்றியூர் வாழ்வே” என்று உரைக்கின்றார். உண்ட சோற்றை உடல் கொள்ளாமையான் கக்குவராயின், அதனைக் காணும் நாய் வெறாது உண்ணுதல் போல, அஃதாவது உண்டு உமிழ்ந்ததை யுண்பதுபோல நாளும் பெற்றதே பெற்று உண்டதேயுண்டு வாழ்வது விளங்க, “கான்ற சோறருந்தும் சுணங்கனின் பல நாள் கண்ட புன்சுகத்தையே விரும்பும் நான்ற நெஞ்சகனேன்” என்று கூறுகின்றார். காலுதல் - கக்குதல், சுணங்கன் - நாய், இன் - ஒப்புப் பொருட்டாய இன்னுருபு. நாளும் உலகியலிற் பெறும் சுகம் நிலையில்லாதாகலின் “புன்சுகம்” என்று பழிக்கின்றார். நாலுதல் - அசைதல். தொங்கவிட்ட பந்துபோல இப்படியும் அப்படியும் அசைதலால் “நான்ற நெஞ்சகன்” என்கின்றார். நெஞ்சன், நெஞ்சகன் என வந்தது; வஞ்சன் வஞ்சகன் என வழங்குதல் போல. சிவபுண்ணியம் செய்தாரைச் சிவகணங்கள் போந்து அழைத்தேகல் போலாது நமன்தூதர் வருவது நாணுடைத்தாகலின், “நமன்தமர் வருநாள் நாணுவதன்றி என் செய்கேன்” என நவில்கின்றார். சிவனது திருவருள் சிவஞானச் செல்வமாதலின் அதனைச் சான்றோர் மெய்ம்மைசான்ற பொருளாக மதித்துப் போற்றுதலால், “சான்றவர் மதிக்கும் நின் திருவருள்” என்றும், திருவருள் நிலையமாகிய இறைவன் திருவடி நீழல் பெறலரும் பேறாதலின், அதனைச் சார்பவர் பெருமிதமுற்றுத் தருக்குவர் என்பதுபற்றி “நின் திருவருள்தான் சார்ந்திடில் தருக்குவன் ஐயா” என்றும் இசைக்கின்றார். “சிறுமானேந்தி தன் சேவடிக் கீழ்ச் சென்றங் கிருமாந்திருப்பன் கொலோ” (தலையங்க) என்று திருநாவுக்கரசர் செப்புவது காண்க.

     இதனால், சிவன் திருவருள் சார்ந்தால் தருக்கி மகிழும் செல்வம் பெறலாம் என்பதாம்.

     (7)