876.

     அங்கையில் புண்போல் உலகவாழ் வனைத்தும்
          அழிதரக் கண்டுநெஞ் சயர்ந்தே
     பங்கமுற் றலைவ தன்றிநின் கமல
          பாதத்தைப் பற்றிலேன் அந்தோ
     இங்கெனை நிகரும் ஏழையார் எனக்குன்
          இன்னருள் எவ்வணம் அருள்வாய்
     மங்கையோர் புடைகொள் வள்ளலே அழியா
          வளங்கொளும் ஒற்றியூர் வாழ்வே.

உரை:

     மங்கையாகிய உமையம்மையை இடப்பாகத்தே யுடைய வள்ளலே, அழியாத வளம் படைத்த ஒற்றியூர்க்கு வாழ்வளிக்கும் முதல்வனே, அங்கையிற் பட்ட புண் அழிவதுபோல் உலகியல் வாழ்வு முற்றும் நிலையின்றிக் கெடுவது கண்டும் மனம் அயர்வுற்றுக் கலங்கி அலைவதன்றி நின் தாமரை போன்ற திருவடிகளைப் பற்றாமல் ஒழிந்தேன்; ஐயோ, இங்கு என்னைப்போலும் ஏழைகள் யாவர் உளர்? அங்ஙனம் இருக்க, எனக்கு உன் திருவருளை எவ்வண்ணம் அருளுவாய், அறிகிலேன். எ.று.

     உமை நங்கையை மணந்து உலகைப் படைத்தளித்து வளம் பலவும் பெருக வுதவுகின்ற பெருமானாதலால், சிவனை, “மங்கையோர் புடைகொள் வள்ளல்” என்றும், “ஒற்றியூர் வாழ்வு” என்றும் ஓதுகின்றார். அங்கை - அகங்கை. அங்கையிற் பட்ட புண் விரைவில் ஆறி மறைந்து போவது பற்றி, நிலையாமைக்கு அதனை யுவமை யாக்கி, “அங்கையிற் புண்போல்” என்று கூறுகின்றார். அங்கைக்குக் குருதியோட்டமும் நரம்பு முனைகளும் மிகைபட நின்று பாதுகாப்பளிக்கின்றன. உடல் விஞ்ஞானிகள் உரைப்பது வள்ளலார் கூறுவதை வலியுறுத்துகிறது. காட்சியும் இன்பமும் நல்கும் வளமும் உலக வாழ்வை நிலையுடையதுபோலக் காட்டி நெஞ்சை மயக்கித் தமக்கு அடிமைப்படுத்தி விடுதலால், உலக வாழ்வு நிலையின்றிக் கெடுங்கால் மனம் வருந்துகிறதென்றற்கு, “உலக வாழ்வனைத்தும் அழிதரக் கண்டு நெஞ்சயர்ந்து பங்கமுற்று” அலைகிறதென வுரைக்கின்றார். பங்கமுறல் - நிலைகுலைதல். பங்கமுறும் மனம் அலைகிறதேயன்றி, அமைதி நல்கும் இறைவன் திருவடியைப் பற்றிக் கொண்டு நிற்பதில்லையாதலால், “பங்கமுற்றலைவ தன்றி நின் கமல பாதத்தைப் பற்றிலேன்” என்று சொல்லி, “அந்தோ” என இரங்குகின்றார். இந்நிலையில் மனத்தை நெறிப்படுத்தி இறைவன் திருவடியைப் பற்றி நிற்கச் செய்யும் நல்லறிவு இல்லாமை உணரப்படுதலால், “இங்கு எனை நிகரும் ஏழையார் ஒருவரும் இலர்” என மொழிகின்றார். ஏழை - அறிவில்லாதவன். நல்லறிவும் நன் மனமும் இல்லார்க்கு இறைவனது நல்லருள் எய்தாதென்பது பற்றி, “எனக்கு உன் இன்னருள் எவ்வணம் அருள்வாய்” என்று உரைக்கின்றார்.

     இதனால், நிலையாமை எண்டு அயர்ந்த என் நெஞ்சம் நிலையுடைய நின் திருவடியைப் பற்றாமையால் எனக்கு இறைவன் திருவருள் கிடைக்குமாறில்லை என ஏங்கியவாறாம்.

     (9)