879.

     தீது வேண்டிய சிறியர்தம் மனையில்
          சென்று நின்றுநீ திகைத்திடல் நெஞ்சே
     யாது வேண்டுதி வருதிஎன் னுடனே
          யாணர் மேவிய ஒற்றியூர் அகத்து
     மாது வேண்டிய நடனநா யகனார்
          வள்ள லார்அங்கு வாழ்கின்றார் கண்டாய்
     ஈது வேண்டிய தென்னுமுன் அளிப்பார்
          ஏற்று வாங்கிநான் ஈகுவன் உனக்கே.

உரை:

     தீமை செய்ய விரும்புகின்ற கீழ் மக்களுடைய மனைக்குச் சென்று முற்றத்தே நின்று உதவி பெறாமையால், நெஞ்சமே, நீ இனித் திகைக்க வேண்டா; யாது வேண்டுமாயினும் வேறு சிந்தனையின்றி என்னுடன் வருக; புது வருவாய் பொருந்திய திருவொற்றியூரின் கண் உமைநங்கையார் விரும்பிய திருக்கூத்தையாடும் தலைவரான சிவபெருமானும் வள்ளலுமாகிய தியாகப் பெருமான் கோயில் கொண்டுறைகின்றார். அவர் திருமுன் சென்று எமக்கு வேண்டுவது ஈது என வாய் திறந்துரைப்பதற்கு முன்னே குறிப்பறிந்து நல்குவர்; அவர்பால் ஏற்று உனக்கு நல்குவேன், வருந்தாதே. எ.று.

     நன்மையை விரும்புவதே பெருமைப் பண்புடைய பெரியோர் செயலாதலின், தீது விரும்புகின்றவர் சிறுமையுறுவது இயல்பாதலால், “தீது வேண்டிய சிறியர்” என்றும், இயல்புணராது அவர் மனைக்குச் சென்று உதவி நாடிப் பெறாமையால் மனநிலை சீர்குலைந்து நினைவு திகைப்புண்டது கண்டு கூறுகின்றாராதலின், “மனையில் சென்று நின்று நீ திகைத்திடல் நெஞ்சே” என்றும், வேண்டுவதை யெண்ணி வேதனை எய்த வேண்டா என்பார், “யாது வேண்டுதி வருதி என்னுடனே”என்றும் இயம்புகின்றார். திகைப்புக் கேது வேண்டுவ தெய்தாமையாதலின் அதனை, யாது வேண்டுவதோ அதனை இனிது எளிதிற் பெறலாம் என்ற குறிப்புத் தோன்ற, “யாது வேண்டுதி என்னுடனே வருதி” என்றுரைக்கின்றார். யாணர் - புதுமை; ஈண்டு ஆகுபெயராய்ப் புதுவருவாய்மேல் நிற்கிறது. கூத்தப்பெருமான் அம்பலத்தில் நின்றாடும் கூத்தனைத்தும் உமையம்மையின் குறிப்பும் விருப்பும் நோக்கி நிகழ்வதாகலின், “மாதுவேண்டிய நடன நாயகனார்”என மொழிகின்றார். பேரருளாகிய செல்வத்தைப் பெருக வழங்குவது பற்றி ஈசனை “வள்ளலார்” என்று சிறப்பித்து, அவர் அங்கு அடிபணிவாரை யருளுதற் பொருட்டு வீற்றிருக்கும் மேன்மையை “அங்கு வாழ்கின்றார் கண்டாய்” என்று குறித்துரைக்கின்றார். “என்பால் இஃது இல்லை, ஈந்தருள்க” என்று இரத்தற்கண் “இலன் என்னும் எவ்வச் சொல் தோன்றலின், அது நீக்கி, “ஈது வேண்டிய”தென்பது ஓரளவு அமைவதாயினும், “இல்லாமை” குறிப்பாய் விளங்குதலின், அதனையும் வேண்டாமல் குறிப்பாய் முற்பட வறிந்து நல்குவர், பெற்றுத் தருவேன் என்பாராய், “ஈது வேண்டிய தென்னுமுன் அளிப்பார் ஏற்று வாங்கி நான் ஈகுவன் உனக்கே” என்று மொழிகின்றார்.

     இதனால், தீதுடைய சிறியர் மனையை நாடாமல் திருவொற்றியூரில் சிவன் திருமுன்பு சென்று நின்றால், அவர் நின் குறிப்பறிந்து வேண்டுவதீயப் பெறலாம்; வருக என்பதாம்.

     (2)