88. உண்டாற் குறையு மெனப் பசிக்கும்
உலுத்த ரசுத்த முகத்தை யெதிர்
கண்டா னடுங்கி யொதுங்காது
கடை காத்திரந்து கழிக்கின்றேன்
கொண்டா ரடியர் நின்னருளை
யானோ ஒருவன் குறைபட்டேன்
திண்டா ரணிவேல் தணிகை மலைத்
தேவே ஞானச் செழுஞ்சுடரே.
உரை: திண்ணிய மாலை யணிந்த வேற்படையை யுடைய தணிகை மலைத் தெய்வமே, ஞானச் செழுஞ்சுடரே, இருப்பதை யுண்டால் அளவிற் குரையுமென அஞ்சி உண்ணாமற் பசித்திருக்கும் கீழான உலோபிகளின் அழுக்குடைய முகத்தைக் கண்டால், அஞ்சி மனம் நடுங்கி நீங்கி யொழியாமல் அவர்களுடைய புறக்கடையில் நின்று இரந்து காலத்தைக் கழிக்கின்றேன்; நினக்கு அடியாராயினார் நினது அருளைப் பெற்றுக் கொண்டாராக, யான் ஒருவனே பெறாது குறைபடுகின்றேன்; எனக்கு அருள் செய்க, எ. று.
படை மறவரிடையே தத்தம் படைகளை வடித்துத் தீட்டி நெய் தடவி மாலை சூட்டி அணி செய்தல் மரபாதலால், மாலை யணியப் பெற்றமை தோன்றத் “திண்டார் அணிவேல்” என்று சிறப்பிக்கின்றார். உண்டற் கமைந்த உண்பொருளை உண்டால் அது தன்னளவிற் குறைந் தொழியுமென எண்ணிப் பட்டினி யிருக்கும் கீழ்மைப் பண்புடைய கயவர்களை உலுத்த ரெனப் பழிப்பாராய், “உண்டாற் குறையுமெனப் பசிக்கும் உலுத்த” ரென்றும், அவர் முகத்திற் பொலிவும் மலர்ச்சியு மில்லாமையால் “அசுத்த முக மென்றும்” இகழ்கின்றார். முகத்தைத் தேய்த்துக் கழுவின் முகந்து வைத்த தண்ணீர் குறையு மென்றும், துடைத்தால் ஆடை யழுக்கேறிக் கெடு மென்றும் கருதுமாறு புலப்பட அசுத்த முகமென்றார் என்றுமாம். கடுத்த பார்வையும் வெடித்த சொல்லும் உடையராதலின், கண்டார் உள்ளத்தில் அச்சமும் மெய்யில் நடுக்கமும் உண்டாதல் பற்றி, எதிர் கண்டால் நடுங்கி ஒடுங்குவர்; இழிகுண மிகுதியால் யான் மனம் ஒடுங்காமல் அவர் மனை முற்றத்தில் நெடிது நின்று பன்னாளும் கழிக்கின்றேன் என்பாராய், “ஒடுங்காது கடைகாத்து இரந்து
கழிக்கின்றேன்” என வுரைக்கின்றார். யாதும் சிறிதும் பெறாமை தோன்றக் “கழிக்கின்றேன்” என்று கூறுகிறார். நினது திருவடியை உள்ளத்திற் கொண்ட மெய்யடியார் திருவருளாகிய அரிய செல்வத்தைப் பெரிய அளவிற் பெற்று மகிழ்கின்றார்கள்; யான் ஒருவனே குறைபட்டுக் கிடக்கின்றேன் என்பார், “கொண்டார் அடியார் நின்னருளை யானோ ஒருவன் குறை பட்டேன்” எனக் கூறுகிறார்.
இதனால் அருள் பெறாக் குறைபாடு கூறி அதனை அருள்க என வேண்டியவாறாம். (7)
|