881.

     கல்லின் நெஞ்சர்பால் கலங்கல்என் நெஞ்சே
          கருதி வேண்டிய தியாதது கேண்மோ
     சொல்லின் ஓங்கிய சுந்தரப் பெருமான்
          சோலைசூழ் ஒற்றித் தொன்னகர்ப் பெருமான்
     அல்லின் ஓங்கிய கண்டத்தெம் பெருமான்
          அயனும் மாலும்நின் றறிவரும் பெருமான்
     வல்லை ஈகுவான் ஈகுவ தெல்லாம்
          வாங்கி ஈகுவேன் வருதிஎன் னுடனே.

உரை:

     கல்லைப் போன்ற நெஞ்சுடையார்பாற் சென்று இரக்கமின்மை கண்டு கலக்க மெய்துதல் வேண்டா; என் நெஞ்சமே, நீ வேண்டுவது யாதோ அதனை எண்ணிக் கேட்பாயாக; புகழால் மேம்பட்ட சுந்தரப் பெருமானும், சோலை சூழ்ந்த திருவொற்றியூராகிய பழைய நகர்க்கண் உறையும் பெருமானும், இருள்போல் நிறமுற்ற கண்டத்தையுடைய பெருமானும், பிரமனும் திருமாலும் நெறிப்பட நின்று அறிதற்கரியனாகிய பெருமானுமாகிய சிவபெருமான் சென்றவிடத்துத் தருவனவற்றை யெல்லாம் விரைந்து தருவான்; யான் அவற்றை வாங்கி உனக்குத் தருவேன்; என்னுடன் வருக. எ.று.

     இரக்கமில்லாத நெஞ்சுடையாரைக் கன்னெஞ்சர் என்பர். அவர்பாற் சென்று இரக்குமிடத்துக் கல்லொக்கும் தன்மை புலப்படக் கண்டு வருந்துவது அறிவுடைச் செயலன்று; இனி அதனைச் செய்ய வேண்டா என்பார், “கல்லின் நெஞ்சர்பாற் கலங்கல்” என்று உரைக்கின்றார், “கலங்கல் என்” எனக்கொண்டு கலங்குவது எற்றுக் கென்றலும் ஒன்று. அமைதி குலைந்து வருந்தும் நெஞ்சிற்குத் தெளிவுரை நல்க முற்படுதலின், “நெஞ்சே, கருதி வேண்டியது யாது அது கேண்மோ” எனக் கூறுகின்றார். மேற்கொண்டு ஒற்றியூர்த் தியாகப்பெருமான் கொடை நலத்தை எடுத்துரைக்க விழைகின்ற வள்ளற் பெருமான் திருவுள்ளத்தில் ஒற்றிப் பெருமானிடத்துள்ள ஆர்வம் பெருகவே, “சொல்லினோங்கிய சுந்தரப் பெருமா” னென்றும், “ஒற்றித் தொன்னகர்ப் பெருமான்” என்றும், “அல்லி னோங்கிய கண்டத் தெம் பெருமான்” என்றும், “அயனுமாலும் நின்று அறிவரும் பெருமான்” என்றும் அடுக்கி யுரைக்கின்றார். சொல் - புகழ். சுந்தரப் பெருமான் - அழகுடைய பெருமான். சுந்தரம் - அழகு. ஒற்றியூர்க் கடற்கரையில் சோலை சூழ வனப்புடன் இருத்தல் பற்றி, “சோலை சூழ் ஒற்றி” எனவும், ஞானசம்பந்தர் முதலிய பெரியோர் காலத்திலேயே சிறந்த செல்வ நகராய்த் திகழ்ந்தமையின், “தொன்னகர்” எனவும் சிறப்பிக்கின்றார். கறுத்த கழுத் தென்றற்கு “அல்லின் ஓங்கிய கண்டம்” என்று இயம்புகின்றார். அல் - இருள்; கரிய கண்டத்தை விசேடிப்பது; கடல் விடமுண்டு தேவர் முதலியோரைக் காத்தருளிய கருணைச் செயலைப் புலப்படுத்தற்கு. நினைவு வேறுற்றுக் கலக்க முறாமைப் பொருட்டு “வல்லை ஈகுவன் ஈகுவதெல்லாம்” என்றும், அதனைப் பெற்று மகிழலாம் என்றற்கு “வாங்கி யீகுவன் வருதி யென்னுடனே” என்றும் எடுத்துரைக்கிறார்.

     இதனால், கன்னெஞ்சரை நாடி வருந்தாது நன்னெஞ்சுடன் ஒற்றித் தியாகப் பெருமானை நாடி யடைந்து வேண்டுவன யாவும் பெறுக என்பதாம்.

     (4)