882.

     இலவு காக்கின்ற கிள்ளைபோல் உழன்றாய்
          என்னை நின்மதி ஏழைநீ நெஞ்சே
     பலவு வாழைமாக் கனிகனிந் திழியும்
          பணைகொள் ஒற்றியூர்க் கென்னுடன் வருதி
     நிலவு வெண்மதிச் சடையுடை அழகர்
          நிறைய மேனியில் நிகழ்ந்தநீற் றழகர்
     குலவு கின்றனர் வேண்டிய எல்லாம்
          கொடுப்பர் வாங்கிநான் கொடுப்பன்உன் தனக்கே.

உரை:

     நெஞ்சே, இலவு காத்திருந்து ஏமாந்து கிளி போல் வருந்துகின்றாய்; நின் அறிவை என்னென்பது? நீ அறிவற்ற ஏழை; பலாவும் வாழையும் மாவும் கனிகனிந்திழியும் வயல்களைக் கொண்ட திருவொற்றியூர்க்கு என்னுடன் வருக; நிலவு பொழியும் வெண்பிறை தங்கிய சடையையுடைய அழகரும், திருமேனி முழுதும் பூசப்பெற்ற திருநீற்றழகருமாகிய தியாகப்பெருமான் தன்பால் அன்புற்றுச் சூழ்பவர் வேண்டுவ அனைத்தையும் கொடுப்பார், நான் வாங்கி உனக்குக் கொடுப்பேன், காண். எ.று.

     இலவ மரத்தின் காய் முற்றிப் பழமாகும்வரையில் தின்ன விரும்பிக் காத்திருக்கும் பச்சைக் கிளி; காய் முற்றிப் பழமாகி வெடித்த வுடன் உள்ளீடு முற்றும் பஞ்சும் கொட்டையுமாகிக் கிளிக்கு உணவாகாதொழியும்; காத்துக்கிடந்து ஏமாந்ததுதான் கிளிக்கு அமைந்ததாம். அதுபோற் பயன்படாச் சிலரை நம்பி மக்கள் ஏமாந்து போவதுண்மை புலப்பட “இலவு காக்கின்ற கிள்ளை போல் உழன்றாய்” என்றும், அறிந்துணரும் திறமின்மைக்கு இரங்கி “நின்மதி என்னை” என்றும், நல்லறி வில்லாமையால், “நீ யேழை” என்றும், உரைக்கின்றார். முக்கனியும் விளையுமிடம் திருவொற்றியூர் என்பார், “பலவு வாழைமாக் கனி கனிந் திழியும் பணைகொள் ஒற்றியூர்” என்று பகர்கின்றார். பழம் முதிர்ந்த வழி தானே யுதிர்வு தியல்பாதலின், “கனி கனிந்திழியும்” எனல் வேண்டிற்று, ‘பழுத்த பழம் மரத்தில் நில்லாது’ என்பது பழமொழி. சடையில் வெண்பிறை ஓர் அழகையும் மேனியில் வெண்ணீறு ஓர் அழகையும் தருவது நினைந்து, “வெண்மதிச் சடையுடை யழகர்” என்றும், “மேனியில் நிகழ்ந்த நீற்றழகர்” என்றும் கூறுகின்றார். குலவுதல் - அன்பால் சுற்றுதல்; அஃதாவது கூடிக் குலாவுதல். அது செய்வோர்க்குச் செல்வர் வேண்டுவன பலவும் தந்து மகிழ்விப்பராதலின், அதனையே விதந்து, “குலவுகின்றனர் வேண்டிய வெல்லாம் கொடுப்பார்” என்றும், வேண்டுவ வேண்டியாங்குக் கொடுப்பவர் உளராகிறபோது வாங்குவோர்க்குப் பொருளின்பால் பற்றுண்டாகாமையால், “வாங்கி நான் கொடுப்பேன் உன்றனக்கே” என்றும் பரிந்துரைக்கின்றார்.

     இதனால், பிறரை யெதிர்பார்த்து ஏமாந்து கெடாது ஒற்றித் தியாகப்பெருமானை வேண்டினால் அவர் உருவழகும் கொடை நலமும் உடையராதலின் நிரம்ப வளிப்பர் என்பதாம்.

     (5)