883. மன்னு ருத்திரர் வாழ்வைவேண் டினையோ
மால வன்பெறும் வாழ்வுவேண் டினையோ
அன்ன ஊர்திபோல் ஆகவேண் டினையோ
அமையும் இந்திரன் ஆகவேண் டினையோ
என்ன வேண்டினும் தடையிலை நெஞ்சே
இன்று வாங்கிநான் ஈகுவன் உனக்கே
வன்னி அஞ்சடை எம்பிரான் ஒற்றி
வளங்கொள் ஊரிடை வருதிஎன் னுடனே.
உரை: நெஞ்சே, நிலைத்த உருத்திரர் வாழ்வா, திருமால் உறையும் வைகுந்த வாழ்வா, அன்னத்தை வாகனமாகவுடைய பிரமனது சத்திய லோக வாழ்வா, கற்பக நீழலிலமைந்த இந்திரனது அமர வாழ்வா என்ன வாழ்வு வேண்டினும் பெறத் தடையேதும் இல்லை; இன்றைக்கே நான் வாங்கி உனக்கு நல்குவன்; வன்னி மலரணிந்த சடையையுடைய எம்பெருமானாகிய தியாகேசனுடைய ஒற்றியாகிய வளமிக்க ஊர்க்கு என்னுடன் வருக. எ.று.
பிரமன், திருமால், இந்திரன் ஆகியோர் வாழ்வு ஓரொருகால் அசுரர் எழுச்சியால் அழிந்ததுபோல உருத்திரர் வாழ்வு சீர்குலைந்த தின்மையின், “மன்னு ருத்திரர் வாழ்வு வேண்டினையோ” என்று கூறுகின்றார். மாலவன் - திருமாலாகிய அவன்; சாத்தனவன் என்றாற்போலும் வழக்கு. அன்னத்தின் மேல் ஊர்வதுபற்றிப் பிரமனை, “அன்னவூர்தி” என்று குறிக்கின்றார். பிரமபதம் வேண்டினையோ என்பார் “அன்னவூர்தி” போல் ஆக வேண்டினையோ” என வுரைக்கின்றார். இந்திரன் வாழ்வு கற்பக நீழற்கண் அமைந்து நினைவார் நினையும் போகம் தருதல் பற்றி, “அமையும் இந்திரனாக வேண்டினையோ” என்று கேட்கின்றார். கொடுப்பார் கொடுக்கச் சமைந்திருக்கும் சிறப்பு விளங்க “என்ன வேண்டினும் தடையில்லை,” என்கிறார். அவாவுற்ற நெஞ்சிற்குக் கூறுதல் பற்றி, “இன்று வாங்கி நான் ஈகுவன் உனக்கே” என இயம்புகின்றார். வன்னி, சிவன் அணியும் மலர் வகையுள் ஒன்று என்பதை, “வன்னி கொன்றை மதமத்தம் எருக்கொடு கூவிளம் பொன்னியன்ற சடையிற் பொலிவித்த புராணனார்” (வாஞ்சியம்) என ஞானசம்பந்தர் பாடுவது காண்க. ஊர்க்கு இடையே கோயில் இருக்குமாறு தோன்ற “ஊரிடை வருதி யென்னுடனே” என்று உரைக்கின்றார்.
இதனால், பதமுத்திகளில் யாது வேண்டினும் தியாகேசனிடம் பெறலாம் என்று தெளிவித்தவாறு. (6)
|