884.

     மறப்பி லாச்சிவ யோகம்வேண் டுகினும்
          வழுத்த ரும்பெரு வாழ்வுவேண் டுகினும்
     இறப்பி லாதின்னும் இருக்கவேண் டுகினும்
          யாது வேண்டினும் ஈகுவன் உனக்கே
     பிறப்பி லான்எங்கள் பரசிவ பெருமான்
          பித்தன் என்றுநீ பெயர்ந்திடல் நெஞ்சே
     வறப்பி லான்அருட் கடல்அவன் அமர்ந்து
          வாழும் ஒற்றியின் வருதிஎன் னுடனே.

உரை:

     நெஞ்சமே, நினைப்பு மறப்பிலாத சிவயோக வாழ்வு வேண்டுமாயினும், வாக்கிறந்த சிவபோகப் பெருவாழ்வு வேண்டினும், இறத்தலின்றி உடம்போடிருக்க வேண்டினும், யாது வேண்டினும் சிவன்பால் வாங்கித் தருவேன்; பிறப்பில்லாதவனான எங்கள் பரசிவப் பெருமானை, பித்தன் எனக் கருதி நீங்கிவிடாதே; வற்றுதல் இல்லாத அருட் கடலாய் இருக்குமவன் விரும்பியிருக்கும் திருவொற்றியூர்க்கு என்னுடன் வருக. எ.று.

     இரவு பகல் எக்காலத்தும் பொருடோறும் நிறை வுற்றிருக்கும், சிவத்தைக் கண்டு அதனோ டிசைந் திருப்பது சிவயோகமாதலால், அதனை, “மறப்பிலச் சிவயோகம்” என்று கூறுகிறார். உமாபதி தேவர், “எப்பொருள் வந்துற்றிடினும் அப்பொருளைப் பார்த்து அங்கு எய்தும், உயிர்தனைக் கண்டு இங்கு அவ்வுயிர்க்கு மேலாம் ஒப்பில் அருள்கண்டு சிவத்துண்மை கண்டு இங்கு உற்றதெல்லாம் அதனாலே பற்றி நோக்கி, தப்பினைச் செய்வது மதுவே, நினைப்பும் அதுதானே, தரும் உணர்வும் புசிப்பும் அது தானே யாகும்; எப்பொருளும் அசைவில்லை என அந்தப் பொருளோடு இசைவதுவே சிவயோகம் எனும் இறைவன் மொழியே” (உண்.நெ.விளக்.) என்று கூறுவது காண்க. கச்சியப்ப முனிவர், தணிகைப் புராணத்தில் “திகழ் அருள் மயமாய்ப் போத முற்றொடுங்கல் . . . சிவயோகம்” (நந்தியுப. 123) என்பர். இவற்றையே வள்ளற் பெருமான், ‘திருநெறிக் குறிப்புக்கள்’ என்ற பகுதியில், “எல்லாம் தானாக யோகு செய்தல்” என்று குறிக்கின்றார். வழுத்தல் - சொல்லுதல். பெரு வாழ்வு என்றது சிவானந்தப் பெருவாழ்வு; தசகாரியத் திருக்குறிப்பினுள் சிவயோகத்தை யடுத்திருப்பதாகிய சிவபோகம் என்பது இதுவே. நிலையின்றிச் சாகும் இயல்பினதாகிய உடம்பைச் சாகாத நிலையிற் பேணிக்கொள்ளும் வாழ்வு, “இறப்பிலாது இன்னும் இருக்கும் வாழ்வு” என உரைக்கின்றார். இதற்குரிய பயிற்சியைச் ‘சாகாக் கலை’ என்பர். “சாகாத கல்வியே கல்வி யொன்றே சிவம் தானென வறிந்த வறிவே, தருமறிவு மலமைந்தும் வென்ற வல்லபமே தனித்த பூரண வல்லபம்” (vi: நடராச.) என்று வள்ளலார் விளம்புவது காண்க. எல்லாப் பொருளும் சிவன் படைத்தமையால் அவருடைய உடைமையாதலின் “யாது வேண்டினும் ஈகுவன்” என்று உரைக்கின்றார். சிவனுக்குப் பிறப்பும் இறப்பும் உண்டென யாரும் எக்காலத்தும் சொல்வதில்லை. இளங்கோவடிகளும் “பிறவா யாக்கைப் பெரியோன்” (சிலப்.) என்பர். அதனால் “பிறப்பிலான் எங்கள் பரசிவப் பெருமான்” என்று கூறுகிறார். திருநாவுக்கரசர், “பிறப்போடிறப் பொன்று மில்லாதான் காண்”(ஆரூர்) என்பது காண்க. சுத்த தத்துவ மத்தகத் துற்ற சிவதத்துவத்துக்கும் அப்பாலுள்ளது பற்றி, “பரசிவப் பெருமான்” என்றும், தன்பால் அன்புற்றுத் தொண்டு செய்வார்க்குத் தான் அடித்தொண்டனாய்த் தொண்டு செய்வது பற்றிச் சிவனைப் “பித்தன்” என்று பேசுவதுண்டு. அதைக் கேட்டு ஏமாறலாகாதென்றற்குப் “பித்தன் என்று நீ பெயர்ந்திடல் நெஞ்சே” என்று தெருட்டுகின்றார். செல்வம் ஓரிடத்தும் நில்லாது வற்றும் இயல்பிற்றாகலின், அக்குறையின்மை புலப்படுத்தற்கு, “வறப்பிலான்” என்றும், “அருட் கடல் அவன்” என்றும் விளக்குகின்றார்.

     இதனால், பரசிவத்தைப் பித்தனெனக் கருதி நீங்காது என்னுடன் வருக; அவன் வற்றா அருட் கடல் என வற்புறுத்தியவாறு.

     (7)