885. காலம் செல்கின்ற தறிந்திலை போலும்
காலன் வந்திடில் காரியம் இலைகாண்
நீலம் செல்கின்ற மிடற்றினார் கரத்தில்
நிமிர்ந்த வெண்நெருப் பேந்திய நிமலர்
ஏலம் செல்கின்ற குழலிஓர் புடையார்
இருக்கும் ஒற்றியூர்க் கென்னுடன் வருதி
ஞாலம் செல்கின்ற துயர்கெட வரங்கள்
நல்கு வார்அவை நல்குவன் உனக்கே.
உரை: காலம் கழிவதை அறிந்திலை போலும்; எமன் வந்து விடுவானாயின் தடுத்தற்குரிய செயலொன்றும் இல்லை; நீல நிறம் பொருந்திய கழுத்தை யுடையவரும், கையில் நேர்பட நிற்கின்ற வெண்மையான நெருப்புப் போன்ற கட்டங்கம் ஏந்துபவரும், ஏலம் கமழ்கின்ற கூந்தலை யுடைய உமாதேவியை ஒரு பாகத்தில் உடையவருமாகிய சிவபெருமான் வீற்றிருக்கும் திருவொற்றியூர்க்கு என்னுடன் வருக. நிலவுலக வாழ்வில் உண்டாகிற துன்பங்கள் நீங்கற் கேற்ற வரங்கள் தருவார்; அவற்றை யான் உனக்கு அளிப்பேன். எ.று.
கணப்போதும் நில்லாது பெயரும் இயல்பினதாகலின், “காலம் செல்கின்றது அறிந்திலை போலும்” என்றும், காலமே கண்ணாயிருக்கும் எமன் வாழ்நாட் கால முடிவில் வருதல் தவறான்; வந்திடின் அவனை விலக்குவது ஒருவர்க்கும் ஆகாத செயல் என்பார், “காலன் வந்திடில் காரியம் இலைகாண்” என்றும் இயம்புகின்றார். விடமுண்டு கறுத்த கழுத்துடைய னாதலால் சிவனை, “நீலம் செய்கின்ற மிடற்றினார்” என்றும், கட்டங்கம் நேர்கோ டிட்டது போல் வளைவின்றி நேர் நிற்பது பற்றி, “நிமிர்ந்த வெண்ணெருப் பேந்திய நிமலர்” என்றும் கூறுகின்றார். மிடற்று நீல நிறம் கண்டவர் நீலகண்டர் என்பர். வெண்ணெருப்பு, இல் பொருளுவமை. வெள்ளொளி விளங்குதல் கண்டு வெண்ணெருப் பொன்றா ரென்றலு முண்டு. ஏலம் - மகளிர் கூந்தற்கிடும் வாசனைக் குழும்பு. நிலவுலகு விண்ணில் ஞால (தொங்க) விட்டது போறலின், ஞாலம் எனப்படுகிறது. பற்று விளைவித்துத் தன்கண் வாழ்வாரை இறுகப் பிணித்தல் கொண்டு, “ஞாலம் செல்கின்ற துயர்” எனல் வேண்டிற்று.
இதனால், நிலவுலகப் பற்று ஒழிதற்கு ஒற்றியூர் இறைவனை வழிபடல் வேண்டும் என்பதாம். (8)
|